Uncategorized

UAE: விசிட்டில் வருபவர்கள் தங்கும் இடம், ரிட்டர்ன் டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும்..!! விதிகளுக்கு இணங்காத இந்தியர்கள் திருப்பி அனுப்பு..!!

ஐக்கிய அரபு அமீரக இம்மிகிரேஷன் அதிகாரிகள் நிர்ணயித்த குறைந்தபட்ச நுழைவு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அமீரகம் வந்த 50 க்கும் மேற்பட்ட சுற்றுலா விசா வைத்திருந்த இந்தியர்கள் விமான நிலையத்திலேயே சிக்கி தவித்துள்ளனர். தற்பொழுது அவர்கள் தங்களது தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

துபாய் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சுற்றுலா விசா வைத்திருந்த பயணிகள் அமீரகத்தில் நுழைவதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதபடியால் அவர்களுக்கு அமீரகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) தெரிவித்துள்ளது.

அமீரகத்திற்கு வரும் பயணிகள் செல்லுபடியாகும் ஹோட்டல் முன்பதிவு அல்லது அமீரகத்தில் வசிக்கும் உறவினர் சிபாரிசு மற்றும் தனது நாடு திரும்புவதற்கான ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்திருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் இமிகிரேஷன் விதிகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விதிகளுக்கு இணங்கும் பெரும்பாலான பயணிகள் அமீரகத்திற்குள் நுழைவதில் எந்த தாமதத்தையும் விமான நிலையத்தில் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பயணிகள் சிக்கி தவிப்பு

கண்ணூர் மற்றும் மும்பையில் இருந்து புதன்கிழமை பல இந்திய பயணிகள் கோ ஏர் (Go Air) விமானங்களின் மூலம் விமான நிலையம் வந்தடைந்ததாக பயண முகவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத் தூதர் நீரஜ் அகர்வால் அவர்கள் கூறுகையில், “புதன்கிழமை இரவு முதல் குறைந்தது 57 இந்திய பயணிகள் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். எங்கள் ஹெல்ப்லைன் மூலம் அவர்களின் நிலை குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. துபாய்க்குள் குறைந்தது 14 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மீதமுள்ளவர்கள் நேற்றிரவு முதல் அங்கேயே சிக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 50 பேருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது” என்று அகர்வால் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “உள்ளூர் குடியேற்ற சட்டங்களை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம், இந்த விதிகள் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளன. இருப்பினும், பயணிகளுக்கு விமானங்களில் ஏறுவதற்கு முன்பு இது குறித்த ஒரு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். எனகுத் தெரிந்தவரை, இந்த விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படவில்லை” என்று கூறினார்.

தேரா டிராவல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சுதீஷ் டி.பி. கூறியதாவது: “இந்தியாவில் இருந்து பல பயணிகள் சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்கு செல்ல துபாய் வழியாக பயணம் செய்கிறார்கள். அவர்கள் இந்த விதிமுறைகளை சந்திப்பதில்லை ” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பயணிகளை இந்தியாவில் இருந்து விமானங்களில் ஏற விமான நிறுவனங்கள் தற்பொழுது அனுமதிக்கவில்லை என்பதும் எங்கள் புரிதலுக்கு வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

நேற்று இரவு 9 மணிக்கு கண்ணூரிலிருந்து கோ ஏர் விமானத்தில் வந்த அமல் தேவ் கூறுகையில், “என்னிடம் 2,000 திர்ஹம் மற்றும் ஹோட்டல் முன்பதிவு இருக்கிறதா என்று இமிகிரேஷன் அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் இல்லை என்று பதிலளித்தேன். அதனை தொடர்ந்து, நானும் என்னுடன் பயணித்த 27 பயணிகளும் விமான நிலையத்தின் டெர்மினல் 3 க்கு மாற்றப்பட்டோம், அங்கு நாங்கள் நேற்றிரவு முதல் தவிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

மற்றொரு பயணி கூறுகையில், நாங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எங்களுக்கு இந்த தகவல் விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், நாங்கள் எங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்து வேறு ஏற்பாடுகளைச் செய்திருப்போம் என்று கூறியிருந்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!