வளைகுடா செய்திகள்

ஓமானில் வீசிய அதிபயங்கரமான மணல்புயலில் சிக்கிய துபாய் குடியிருப்பாளர்கள்.!! – ஈத் அல் அதா விடுமுறையை முடித்து விட்டு திரும்பும் போது எதிர்கொண்ட சிக்கல்..!!

ஓமானின் சலாலாவில் நேற்று முன்தினம் நிலவிய மோசமான வானிலை துபாய் நோக்கி வந்து கொண்டிருந்த ஏராளமான வாகன ஓட்டிகளை பாதித்துள்ளது. குறிப்பாக, ஈத் அல் அதா விடுமுறையை ஓமானில் கழித்துவிட்டு, மீண்டும் அமீரகத்திற்கு திரும்பிய எமிராட்டி வாகன ஓட்டிகள் புழுதிப்புயலின் தீவிரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

மேலும், இந்த கடும் தூசிப்புயலில் சிக்கிய சில கார்களும் வெகுவாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரடியாக எதர்கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் சிலர் தாங்கள் எதிர்கொண்ட அதிபயங்கரமான தூசிப்புயலின் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளனர்.

துபாயில் வசிக்கும் இந்திய நாட்டவரான கவ்ரில் மான்கூ (Gavril Mankoo) என்பவர், அவரது ஈத் அல் அதா விடுமுறையை குடும்பத்தினருடன் ஓமானின் சலாலாவில் கழித்துவிட்டு, ஜூலை 1ஆம் தேதியன்று மாலை நேரத்தில் துபாய்க்கு மீண்டும் புறப்பட்டிருக்கிறார். அப்போது, சலாலாவில் மேகமூட்டமாக இருந்துள்ளது.

அப்போது, சலாலா-நிஸ்வா-இப்ரி-துபாய் நெடுஞ்சாலையில் தன் மனைவி, தன் சகோதரர் மற்றும் மைத்துனர் ஆகியோருடன் துபாய் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது சரியாக மாலை 6.17 மணியளவில் திடீரென அதிபயங்கரமான மணல் புயலில் அவர்கள் சிக்கித் தவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, லேசான மழையுடன் சக்திவாய்ந்த காற்று வீசியதில் அதிகப்படியான தூசியும் கிளம்பியதால், வலுவடைந்த மணல் புயலின் காரணமாக சாலையில் தெரிவுநிலை மிகவும் மோசம் அடைந்ததாகவும், ஒரு கட்டத்தில் வாகனம் ஓட்டுவது ஆபத்தானதாகவும் சிரமமாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

புயலுக்குப் பின், மறுநாள் அவரது காரைப் பார்த்த போது, காரின் சேதத்தைக் கண்டு வியப்படைந்துள்ளார். மணல் புயலில் சிக்கிய காரின் கண்ணாடி, பெயின்ட், மற்றும் ஹெட்லைட்களும் சேதமடைந்துள்ளதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், கடுமையான புயலில் சிக்கினாலும் தனது குடும்பம் பாதுகாப்பாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றியை தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவரைப்போலவே, ஷார்ஜாவில் வசிக்கும் சஃப்வான் கான் எனபவரும் தனது ஈத் விடுமுறையின் ஒரு பகுதியை ஓமானில் கழித்த பின்னர் தனது குடும்பத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்த போது தீவிரமடைந்த புழுதிப் புயலைக் கண்டு திகைத்துப் போனதாக குறிப்பிட்டுள்ளார்.

புழுதிப்புயலில் பயணம் செய்தது பற்றி இவர் கூறுகையில், மாலை 5:45 மணியளவில் புழுதிப்புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தாகவும், சுமார் 6:15 மணி அளவில் தெரிவுநிலை முற்றிலும் குறைந்து ஜீரோ நிலைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக கடும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், புதன்கிழமை முதல் ஓமானின் பெரும்பாலான கவர்னரேட்டுகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஓமன் நாட்டின் வானிலை அலுவலகம் (Oman Meteorological Office) தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வப்போது பெய்யும் இடியுடன் கூடிய மழையால் வாடிகளில் நீரின் ஓட்டம் அதிகரிக்கலாம் மற்றும் அல் ஹஜர் மலைகளின் சில பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பலத்த தாழ்வு காற்று ஏற்படலாம் என்றும் வானிலை அலுவலகம் கூறியுள்ளது.

அத்துடன், பலத்த காற்றின் காரணமாக அதிகப்படியான தூசி கிளம்புவதால், அல் வுஸ்டா மற்றும் தோஃபர் கவர்னரேட்டுகளில்  தெரிவுநிலையைக் குறையும் என்றும், அபாயங்களைத் தவிர்க்க வாகனங்களில் செல்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் ராயல் ஓமன் காவல் துறை ட்விட்டரில்  எச்சரித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!