இந்தியா, இலங்கை உட்பட 35 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கியது குவைத்..!! 14 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!!

கொரோனா பாதிப்பையொட்டி கடந்த ஆண்டு குவைத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளாக கண்டறியப்பட்ட இந்தியா, இலங்கை உட்பட 31 நாடுகளில் இருந்து குவைத்திற்கு நேரடியாக பயணிக்க குவைத் அரசானது பயணத் தடையை முதன் முதலில் அறிவித்தது. பின்னர், 35 நாடுகளுக்கு பயணத் தடை நீட்டிக்கப்பட்டது.

இதனால், குவைத்தில் பணிபுரிந்து கொண்டு விடுப்பில் தங்கள் நாடுகளுக்கு சென்ற பலரும் குவைத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 21 ஆம் தேதி நிலவரப்படி, இந்த 35 நாடுகளின் தடையை நீக்கி, அந்நாடுகளில் இருந்து பயணிகள் நேரடியாக குவைத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட இருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவிக்கையில், 35 நாடுகளில் ஒன்றிலிருந்து குவைத்துக்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்கள் சொந்த செலவில் ஹோட்டலில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து குவைத்திற்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த செலவில் 7 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து DGCA துணை இயக்குனர் சலே அல் ஃபதகி கூறுகையில், ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருப்பதற்கு 45 ஹோட்டல்களில் ஏதேனும் ஒன்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

குவைத்தின் செய்தி நிறுவனம் அல் ராய் 14 நாட்கள் ஹோட்டலில் தங்குவதற்கான விலை பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரட்டை அறைக்கு 725 குவைத் தினார் மற்றும் ஒரு அறைக்கு 595 தினார்ஸ், நான்கு நட்சத்திர ஹோட்டலில் இரட்டை அறைக்கு 530 குவைத் தினார்கள் மற்றும் ஒரு அறைக்கு 400 குவைத் தினார்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டலில் இரட்டை அறைக்கு 400 குவைத் தினார்கள் மற்றும் ஒரு அறைக்கு 270 குவைத் தினார்கள் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் குவைத் குடிமக்கள், வெளிநாட்டில் படிக்கும் குவைத்தை சேர்ந்த மாணவர்கள், 18 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த முடிவிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குவைத்துக்கு வருவதற்கு முன்பு, அனைத்து பயணிகளும் தாங்கள் ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்துள்ளோம் என்பதற்கும் குவைத் மொசாஃபர் விண்ணப்பத்தில் பதிவு செய்திருப்பதற்கும் ஆதாரம் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://kuwaitmosafer.gov.kw/ என்ற லிங்கில் சென்று பதிவு செய்யாதவர்கள் குவைத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குவைத் அரசானது அதிக ஆபத்துள்ள நாடுகளாக புதிதாக 33 நாடுகளை இணைக்கவிருப்பதாகவும் இதனால் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 60 க்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக சேர்க்கப்படவுள்ள நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.