வளைகுடா செய்திகள்

எவ்வித அபராதமும் இன்றி ஓமானை விட்டு வெளியேறுவதற்கான சலுகை காலம் நீட்டிப்பு..!! தொழிலாளர் அமைச்சகம் தகவல்..!!

ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் எந்தவொரு அபராதமும் கட்டணமும் இன்றி ஓமான் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று ஓமான் தொழிலாளர் அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அவ்வாறு வெளியேற விருப்பும் நபர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15 முதல் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு வெளியேற பதிவு செய்து வந்தனர்.

நவம்பர் 15 அன்று முதல் அமலுக்கு வந்த இந்த திட்டம் டிசம்பர் 31,2020 அன்று காலாவதியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் இது மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான அரசு அறிவித்த இந்த சிறப்புத் திட்டம்  ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானியரல்லாத தொழிலாளர்கள் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறவும், வேலை அனுமதி காலாவதியாகும் விளைவாக ஏற்படும் அனைத்து கட்டணங்கள் மற்றும் அபராதங்களிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பணி அனுமதி காலாவதியானவர்கள் அல்லது சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் என பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் இந்த காலகட்டத்தில் புறப்படுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகை காலத்தில் ஓமானில் வாழும் அனைத்து ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களும் எந்தவொரு அபராதம் அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளும் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை இத்திட்டத்தில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்கள் மற்றும் ஓவர்ஸ்டேயில் தங்கியிருக்கும் சுற்றுலாவாசிகள் அமைச்சின் வலைத்தளமான http://www.mol.gov.om அல்லது சனத் அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சகம் இது குறித்து தெரிவிக்கையில், ஜூன் 30 க்குப் பிறகு தொழிலாளர் நிலையை சரிசெய்வதற்கான விண்ணப்பங்கள் எதுவும் பெறப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த நவம்பர் முதல் ஓமானில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மத்தியில் இது குறித்து பலதரப்பட்ட பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருவதாகவும், இதன் விளைவாக கிட்டத்தட்ட 3,000 பேர் இந்த திட்டத்தின் மூலம் வெளியேற பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓமான் நாட்டிற்கான இந்திய தூதர் முனு மஹாவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 க்குப் பிறகு, இந்த இலவச வெளியேற்றத்திற்கான அனைத்து விண்ணப்பங்களுக்கான ஒப்புதல்களும் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் ஆன்லைனில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சின் தொழிலாளர் நலத்துறை இயக்குநர் ஜெனரல் சலீம் சையத் அல் பாடி அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!