சவூதி: மீண்டும் துவங்கப்பட இருக்கும் சர்வதேச விமான சேவைகள் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு பொருந்தாது..!! சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!!

சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், அடுத்த மாதம் சவூதி அரேபியாவில் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், கடந்த பிப்ரவரி மாதம் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட 20 நாடுகளுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிப்ரவரி மாதத்தில் 20 நாடுகளில் இருந்து வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைவதை தடை செய்வதாக சவூதி உள்துறை அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.

தூதர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

சவுதி அரேபியாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள விமான சேவைகள் மே 17 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் மீண்டும் இயக்கப்படும் என்றும், இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றான பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கும் 20 நாடுகளுக்கு இது பொருந்தாது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் இந்தியா, அர்ஜென்டினா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, ஜப்பான், அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சுவீடன், சுவிட்சர்லாந்து, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளாகும்.

சவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு விண்ணப்பிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னர் 20 நாடுகளில் ஏதேனும் ஒன்றில் டிரான்ஸிட் விமானங்களில் பயணித்தவர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.