அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் 30,000 உணவு பொருட்களின் விலையை குறைக்கும் பொருளாதார அமைச்சகம்..!!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு இம்மாதம் தொடங்கவிருப்பதை முன்னிட்டு ரமலான் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 30,000 உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று பொருளாதார அமைச்சகம் (Ministry of Economy) தெரிவித்துள்ளது.

இந்த விலைக்குறைப்பின் மூலம் அரிசி, மாவு, சர்க்கரை, இறைச்சி, மீன் மற்றும் பழச்சாறுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் என்றும் அமீரகத்தில் உள்ள 900 விற்பனை நிலையங்களில் 25 முதல் 75 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

புனித ரமலான் மாதத்தில் நியாயமற்ற முறையில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர்வை அதிகாரிகள் கட்டுப்படுத்துவார்கள் என்றும், மளிகைக் கடைகள் மற்றும் வணிகங்கள் பொருளாதார அமைச்சகத்தின் விதியைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் 420 சோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து பொருளாதார அமைச்சகத்தின் போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநரான மர்வான் அல் ஸ்பூசி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு கூட்டம் தொடர்பாக விவரிக்கையில் அமைச்சக அதிகாரிகள் விலை உயர்வுக்கு எதிராக வர்த்தகர்களை சந்தித்து எச்சரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த கூட்டங்கள் அனைத்து சப்ளையர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அளவை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டும், மற்றும் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் சந்தைகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வது; மற்றும் பொருட்களின் கிடைப்பை உறுதி செய்வதற்கும் சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் திட்டங்களை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக அல் ஸ்பூசி கூறியுள்ளார்.

மேலும் இந்த விவாதத்தில் ரமலான் மாதத்திற்கான ஏற்பாடுகள், விலைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நியாயமற்ற விலை உயர்வுகளைத் தடுப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரமலான் மாதத்தில் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அபுதாபி மற்றும் துபாயில் உள்ள பழம் மற்றும் காய்கறி சந்தைகளின் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் துபாய் தினமும் சுமார் 17,000 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதாகவும், அபுதாபி மொத்தம் 5,000 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்கிறது என்றும் பொருளாதார அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!