அமீரக செய்திகள்

துபாய்: தேராவில் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ள ‘ரமலான் சூக்’.. முனிசிபாலிட்டி அறிவிப்பு….

துபாயின் தேரா (Deira) பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய முனிசிபாலிட்டி ஸ்ட்ரீட்டில் (Old Municipality Street) புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ‘ரமலான் சூக்’ நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கவுள்ளது.

துபாய் முனிசிபாலிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சூக் துபாயில் புனிதமான ரமலான் மாதத்தின் வருகையைக் கொண்டாடும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். நாளை (பிப்ரவரி 16) தொடங்கும் ரமலான் சூக் அடுத்த மாதம் மார்ச் 9ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான கடைகளுடன் பரபரப்பாகக் காணப்படும் தேராவின் சந்தையில் ரமலான் தயாரிப்புகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் மற்றும் கேட்ஜெட்கள், தனிப்பட்ட மற்றும் வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை ஷாப்பிங் செய்து மகிழலாம்.

அதுமட்டுமின்றி, ‘ஹாக் அல் லைலா’வைக் (Hag Al Laila) கொண்டாடுவதற்கான சிறப்பு தயாரிப்புகளும், நேரலை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடுகளும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் சூக்கின் சிறப்பு:

ரமலான் சூக் நிகழ்வானது, அந்த பகுதியில் சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக மட்டுமில்லாமல், பாரம்பரிய சந்தைகளை காட்சிப்படுத்தவும், ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதத்திற்கான தயாரிப்புகளுடன் தொடர்புடைய பழமையான பழக்கவழக்கங்களின் பாரம்பரியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காகவும் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுவதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய தேராவின் வரலாற்று சந்தைகள் பாரம்பரிய வணிக மையங்களாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெற்றுள்ளதாகவும், இந்த சந்தைகள் அவற்றின் வகைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பு, மறுவாழ்வு மற்றும் வகைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும் முனிசிபாலிட்டி மேலும் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, தேராவில் அல் தலாம் சூக் அல்லது டார்க்னஸ் மார்க்கெட் என்று பிரபலமாக அறியப்படும் கிராண்ட் சூக் உள்ளது, இது பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது. இங்கு பானைகள் மற்றும் தட்டுகள் போன்ற சமையலறை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் தட்டுகள் சந்தை (Plates Market) உள்ளது.

அதேபோல், சூக் அல் மனசர் (Souq Al Manazer) எனப்படும் மற்றொரு சூக், ஆண்கள் துணிகள் சந்தை மற்றும் பலதரப்பட்ட பொருட்களை வழங்குகிறது.

இவை தவிர, கவச நாற்காலிகள் மற்றும் தலையணைகள் போன்றவற்றின் விற்பனைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அல்-மதாரி சந்தை உள்ளது. கூடுதலாக, உணவு சந்தை, கடல் கருவிகள் சந்தை, துணிகளுக்கான சூக் அல் கிலாக், வாசனை திரவிய சந்தை மற்றும் தங்க சந்தை ஆகியவை இப்பகுதியில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க சந்தைகளாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!