இந்தியா-அமீரகம் : பயணத் தடை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு..!!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் இயங்க மே 14 வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இத்தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு சர்வதேச அல்லது உள்ளூர் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் பயணிகள் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததைப் போல, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், உத்தியோகபூர்வ பிரதிநிதிகள், கோல்டன் ரெஸிடென்ஸி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வணிகர்களின் விமானங்கள் ஆகியோருக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க மாற்று வழி உண்டா?? பயணத் தடையில் இருந்து விலக்கு பெற்றவர்கள் யார்??

அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை போன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான சேவை மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்து சேவையானது வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையானது கடந்த ஏப்ரல் மாதம் 24 ம் தேதி 23.59 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.