ஷஹீன் புயல்: ஓமானில் வெள்ளத்தின் போது காணாமல் போன குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு..!!

ஓமானில் இன்று கரையை கடந்துவரும் ஷஹீன் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது காணாமல் போன குழந்தை ஒன்று வெள்ளத்தில் சிக்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்கட்டின் அல் அமரத் விலாயத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக ஓமான் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓமானில் மையம் கொண்டிருந்த ஷஹீன் புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை ஓமானின் கடலோர பகுதிகளில் கரையை கடப்பதை முன்னிட்டு, தலைநகரான மஸ்கட்டில் இருந்து இந்தியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் மற்றும் மஸ்கட் விமான நிலையத்திற்கு உள்வரும் விமானங்களை தாமதப்படுத்தவும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு வெளியேறவும் ஏற்கனவே அவசர மேலாண்மை தேசிய குழு அறிவுறுத்தியிருந்தது.

புயலின் மைய கண் பகுதியானது அதிகாலையில் மஸ்கட்டில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இருந்தது என்றும் மற்றும் அது 120 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் காற்று வீசும் என்று நாட்டின் ஆபத்து, வானிலை மற்றும் சிவில் விமான நிறுவனங்களின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புயலின் மையப்பகுதி இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் நிலப்பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் புயலின் மையப் பகுதியின் வெளிப்புற பட்டைகள் ஏற்கனவே ஓமானின் நிலப்பகுதியை அடைந்து விட்ட நிலையில் ஓமானில் அதிக காற்று மற்றும் அதிக மழைப்பொழி பதிவாகியுள்ளது.

ஓமானில் கரையை கடக்கும் இந்த ஷஹீன் புயலின் தாக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளிலும் எதிரொலித்துள்ளது. அமீரகத்தின் தேசிய வானிலை மையமும் அமீரகத்தின் கடல் பகுதிகளில் ஏற்கனவே கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் ஏற்படும் என கூறியிருந்த நிலையில், ஷார்ஜா பகுதியில் உள்ள கல்பா கடலில் கடல் சீற்றம் இன்று காலை முதல் பதிவாகியதாக செய்தி வெளிவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.