வளைகுடா செய்திகள்

சுற்றுச்சூழலை பாதிக்காத நான்கு வகையான பைகளை அறிமுகப்படுத்திய கத்தார்.. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக புதிய முயற்சி..!!

கடந்த ஜூலை 3-ம் தேதி “சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம்” கடைபிடிக்கப்பட்ட நிலையில், கத்தார் நாடானது சுற்றுச்சூழலை பாதிக்காத நான்கு வகையான பைகளை நாடு முழுவதும் பயண்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது.

காகிதங்கள், சணல், பருத்தி மற்றும் மக்கும் பொருட்களால் செய்யப்பட்ட இந்த பைகள், பல்வேறு வகையான சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் கத்தார் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கத்தார் நாட்டில் நிறுவனங்கள், ஷாப்பிங் சென்டர்கள், அனைத்து வகையான பொருட்களின் பேக்கேஜிங், சேமித்தல், வழங்குதல், வர்த்தகம் செய்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகிய அனைத்து செயல்பாடுகளுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இந்த தடையை தொடர்ந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள்  அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பைகள் பல வணிக நிலையங்களில் பயண்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, கத்தாரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இனி துணி பைகள் (நெய்யப்பட்டவை), காகித பைகள், மக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயண்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டின் முனிசிபாலிட்டி சட்டப்பிரிவு 143 இன் படி, பிளாஸ்டிக் பைகள் அவற்றின் வகையைப் பொறுத்து அவற்றின் மக்கும் தன்மை, மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சித்திறன் ஆகியவற்றைக் குறிக்கும் குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று சட்டமும் இயற்றப்பட்டது.

இவற்றினை மக்களுக்கு நினைவூட்டும் வகையில், ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஜூலை 3-ம் தேதி அனுசரிக்கப்பட்ட சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினத்தன்று, இது குறித்த விழிப்புணர்வினை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பேக்கேஜிங் பொருட்களில் பிளாஸ்டிக் பைகள் தொடர்பான நிபந்தனைகளை அவர்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து நகராட்சிகளிலும் உள்ள சுகாதார கண்காணிப்பு பிரிவுகளின் ஆய்வாளர்கள் உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பைகள் எளிதாக மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு உதவினாலும், அது சுற்றுப்புற சூழலுக்கும், பிற்கால சந்ததியினருக்கும் மிகப் பெரும் அபாயத்தை விளைவிக்க கூடியவை என்று கத்தார் அரசு தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைத்த வண்ணம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!