அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய பகுதிகளிலிருந்து வெறும் 10 திர்ஹம்ஸில் குளோபல் வில்லேஜ் செல்லும் வழித்தடங்கள் பற்றி தெரியுமா..?

உலக புகழ்பெற்ற குளோபல் வில்லேஜ் துபாயின் 27வது சீசன் முடிவதற்கு இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டிற்கான சீசன் முடிவதற்கு முன்பாக, துபாயின் முக்கிய பகுதிகளில் இருந்து குளோபல் வில்லேஜிற்கு செல்ல விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள், துபாய் பொதுப் பேருந்து சேவையை பயன்படுத்துவதன் மூலம் வெறும் 10 திர்ஹம்களில் குளோபல் வில்லேஜ் சென்றடைய முடியும். அவை எந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது என்பது பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் இருந்து குளோபல் வில்லேஜூக்கு ஒரு வழி பயணம் செய்யும் போது ஒரு நபருக்கு 10 திர்ஹம் மட்டுமே செலவாகும். இந்த கட்டணத்தை நோல் கார்டு மூலம் செலுத்த வேண்டும். இரு வழி பயணம் செய்ய விரும்புபவர்கள் நோல் கார்டில் போதுமான இருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நோல் கார்டில் போதுமான இருப்பு இல்லை என்றால் ‘நோல் பே’ மொபைல் ஆப் மூலம் அதை டாப் அப் செய்யும் வசதியம் உள்ளது.

ரஷிதியாவில் உள்ள சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து செல்லும் வழித்தடம்:

சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்தில் உள்ள அல் ரஷ்தியா பேருந்து நிலையம் கேட் 5 இலிருந்து புறப்படும் பேருந்து 102 இல் சென்றால் குளோபல் வில்லேஜ் சென்றடைய 30 நிமிடங்கள் ஆகும். இந்த பேருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.

தேராவில் உள்ள யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து செல்லும் வழித்தடம்:

தேராவில் வசிக்கும் ஒருவர் குளோபல் வில்லேஜுக்கு செல்ல வேண்டுமெனில், யூனியன் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள யூனியன் ஸ்கொயர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து 103-இல் ஏறிப் பயணிக்கலாம். இங்கிருந்து குளோபல் வில்லேஜை சென்றடைய சுமார் ஒரு மணிநேரம் ஆகும்.

அல் ஃபஹிதியிலிருந்து செல்லும் வழித்தடம்:

பர் துபாய், கராமா அல்லது அல் ஃபஹிதி சுற்றுப்புறத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அல் ஃபஹிதியில் உள்ள அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து 104-இல் பயணம் செய்யலாம். இந்த பேருந்து ஒவ்வொரு மணி நேரமும் இங்கிருந்து இயக்கப்படும்.

மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து செல்லும் வழித்தடம்:

எமிரேட்ஸ் மாலிற்கு அருகில் வசிப்பவர்கள் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து 106-ல் குளோபல் வில்லேஜிற்கு பயணிக்க முடியும். இங்கிருந்து குளோபல் வில்லேஜை அடைய சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.

குளோபல் வில்லேஜ் செயல்படும் நேரம்:

ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான வார வேலை நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான வார விடுமுறை நாட்களில் மாலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும்.

அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்களைத் தவிரத்து, வாரத்தின் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் பெண்கள் மற்றும் குடும்பங்கள் மட்டுமே அனுமதிப்படுவர். மேலும் இந்த ஆண்டிற்கான குளோபல் வில்லேஜ் துபாயின் 27வது சீசன் எதிர்வரும் ஏப்ரல் 29, 2023 அன்றுடன் முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!