அமீரக செய்திகள்

UAE: கண்கவரும் வானவேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக துவங்கிய ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

ஷார்ஜாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி இந்த வருடம் பிப்ரவரி 8 ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (பிப்ரவரி 8) ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவலின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஷார்ஜாவின் யுனிவர்சிட்டி சிட்டி ஹாலில் இடைவிடாது பிரம்மாண்டமான முறையில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த லைட் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் இருக்கும் முக்கியமான 13 இடங்களிலும் பிரம்மாண்ட விளக்குகளால் பிப்ரவரி 18 வரை ஒளியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பார்வையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் விதமாக, விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கவர்ச்சிகரமான பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை ஃபெஸ்டிவலில் நிறைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஷார்ஜா வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் Sharjah Commerce and Tourism Development Authority (SCTDA) லைட் ஃபெஸ்டிவலின் 12வது பதிப்பை ‘Chasing The Light’ என்ற தலைப்பில் தொடங்கியுள்ளது. அதேசமயம், இந்த ஆண்டு ஷார்ஜாவின் தனித்துவமான நகர்ப்புற மற்றும் கட்டிடக்கலை தன்மையையும் அதன் கலாச்சார அடையாளத்தையும் உயர்த்திக் காட்டுவதற்காக லைட் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை ஒரு புதிய வடிவத்தில் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணமயமான ஒளி காட்சிகள் மற்றும் கலை காட்சிகளால் ஷார்ஜாவின் கட்டிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்படுவதுடன் திறமையான கலைஞர்களின் குழுவுடன் ஏழு சர்வதேச கலைஞர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

SCTDA இன் தலைவர் காலித் ஜாசிம் அல் மிட்ஃபா அவர்கள் லைட் ஃபெஸ்டிவல் குறித்து கூறியதாவது, “ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவலானது, மறக்க முடியாத எண்ணற்ற வண்ணமிகு நினைவுகளை உருவாக்க ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய நிகழ்வு என்றும் அத்துடன் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு இணையவாசிகளை மகிழ்விக்கிறது” என்றார்.

மேலும், இது குறித்து அல் மிட்ஃபா கூறுகையில், ஷார்ஜாவின் அனைத்து சாதனைகளையும் நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் அத்துடன் லைட் ஃபெஸ்டிவலின் புகழ் மற்றும் நற்பெயரைக் கொண்டாடுவதாகவும் கூறியுள்ளார். மேலும், ஷார்ஜாவின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஹிஸ் ஹைனஸ் ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் ஷேக் சுல்தான் அவர்கள் அளித்துள்ள எல்லையற்ற ஆதரவு மற்றும் அதிகார சபையின் அயராத முயற்சியின் விளைவுதான் ஃபெஸ்டிவலின் வெற்றி என்று அல் மிட்ஃபா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, 19,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட லைட் வில்லேஜ் பகுதியில், 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்ப்பதை ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய பிரம்மாண்டமான லைட் ஃபெஸ்டிவலை அலங்கரிக்கும் ஒரு முயற்சியாக ஷார்ஜாவின் பிரபலமான இடங்கள் ஒளியூட்டப்படும். அந்த இடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. யுனிவர்சிட்டி சிட்டி ஹால்
  2. அல் நூர் மசூதி
  3. காலித் லகூன் கார்னிச்
  4. ஷார்ஜா மசூதி
  5. அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட்
  6. ஷார்ஜா கோட்டை (அல் ஹிஸ்ன்)
  7. அல் ஹம்ரியா நகராட்சி கட்டிடம் மற்றும் அல் தைத் கோட்டை
  8. கோர்பக்கனில் உள்ள அல் ரஃபிசா டேம்
  9. கல்பா க்ளாக் டவர்
  10. திப்பா அல் ஹிஸ்னில் உள்ள ஷேக் ரஷித் பின் அஹ்மத் அல் காசிமி மசூதி
  11.  BEEAH குழுமத்தின் தலைமையகம்
  12. லைட் மியூசியம்
  13. லைட் வில்லேஜ்

Related Articles

Back to top button
error: Content is protected !!