வளைகுடா செய்திகள்

சுத்தம் செய்ய ஆளில்லாமல் தத்தளிக்கும் குவைத் விமான நிலையம்… துப்புரவு ஒப்பந்தம் காலாவதியானதால் எழுந்த சுகாதார பிரச்சனை..!!

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் T1 இன் துப்புரவு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால், அப்பகுதியில் சுகாதார பணிகள் குறித்த கேள்விக்குறி தற்பொழுது எழுந்துள்ளது. தற்பொழுது கோடை விடுமுறை முடியும் காலம் என்பதால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்திற்கு வரக்கூடும். எனவே இந்நிலையில், துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று இந்த பிரச்சனையில் விமான இயக்குனரகம் தற்பொழுது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

ஏற்கனவே விமான நிலையத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த துப்புரவு நிறுவனம், தங்களுக்கு வரவேண்டிய நிதி பாக்கிகள் இன்னும் வந்து சேரவில்லை என விமான இயக்குனரகத்தை குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் தங்களது சேவைகள் மற்றும் இயந்திரங்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது. மேலும் ஜூலை 25ஆம் தேதி உடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், நீட்டிப்பு தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று துப்புரவு நிறுவனம் கூறியிருந்தது.

இது குறித்த அதிகாரப்பூர்வ கடிதங்களின்படி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஜனவரி மாதம் KD805,000 ($2.67 மில்லியன்) செலவில் ஒப்பந்தத்தை நீட்டிக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது என விமான இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான பயணக் காலத்தில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது தற்பொழுது அனைவரின் விமர்சனத்தையும் பெற்று வருகின்றது.

இந்நிலையில், விலக்குகள் இல்லாமல் நிலுவைத் தொகையை செலுத்தவும், சலுகை மற்றும் ஒப்பந்த நீட்டிப்புக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவும் நிறுவனம் DGCA-ஐ வலியுறுத்தியுள்ளது. விமான நிலைய நிர்வாகம் நிறுவனத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்து சேவை தொடரப்படும் என்று துப்புரவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் துப்புரவு நிறுவனம் ஆகிய இருவரும், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் சுகாதாரத்தை மனதில் வைத்துக் கொண்டு பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!