அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!! கொரோனா பரவல் எதிரொலி..!!

உலகில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளன. இந்தியாவிலும் இதனையொட்டி சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவிற்கான சோதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கான கொரோனாவிற்காக பின்பற்றப்படும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரங்களை கீழே காணலாம்.

வழிகாட்டுதல்கள்:

>> அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியின் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை அட்டவணையின்படி முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

>> அனைத்து பயணிகளும் முக கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் விமானங்களிலும் பயணத்தின் போதும் மற்றும் அனைத்து நுழைவு இடங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

>> அனைத்து பயணிகளும் இந்தியாவிற்கு வந்ததற்கு பின் தங்கள் உடல்நலத்தை சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அல்லது தேசிய உதவி எண் (1075) அல்லது மாநில உதவி எண்ணை அழைக்க வேண்டும்.

இருப்பினும், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வருகைக்கு பிந்தைய சோதனை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. சிறுவர்கள் வருகையின் போது அல்லது சுய கண்காணிப்பின் போது கொரோனா நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால், கொரோனாவிற்கான நெறிமுறையின்படி பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடையே சீரற்ற சோதனையை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து அதன்படி இந்த நடவடிக்கையானது டிசம்பர் 24 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டிற்கு சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் குறைந்தது இரண்டு சதவீதம் பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

MoCA வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சோதனை மேற்கொள்ள வேண்டிய பயணிகளை விமான நிறுவனம் தேர்ந்தெடுத்து சோதனைக்கான மாதிரி சேகரிப்புக்குப் பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் நேர்மறை முடிவைப் பெற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ‘சர்வதேச பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை’ வெளியிட்டது. மேலும் இந்த வழிகாட்டுதல்கள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!