அமீரக செய்திகள்

UAE: பிஸினஸ் லைசன்ஸ்களை புதுப்பிக்காததற்கான அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடியை அறிவித்த எமிரேட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்து வரும் சில வெளிநாட்டவர்கள் ஒரு சில காரணங்களால் தங்களின் பிஸினஸ் லைசன்ஸ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்காமல் இருந்து விடுவார்கள். அவ்வாறு ஷார்ஜாவில் பிசினஸ் லைசன்ஸ்களை புதுப்பிக்காமல் இருக்கும் வணிக உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில், தற்போது 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட் ஆஃப் ஷார்ஜாவின் நிர்வாகக் கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தள்ளுபடியானது நிபந்தனைக்குட்பட்டது எனவும் கூறப்படுகிறது. ஆகவே, இந்த சலுகையை பயண்படுத்தி எதிர்வரும் ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி நான்கு மாத கால இடைவெளியில் வணிக உரிமையாளர்கள் தங்கள் நிலையை சரிசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முடிவு ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரும் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான ஷேக் அப்துல்லா பின் சலீம் பின் சுல்தான் அல் காசிமி அவர்கள் தலைமை தாங்கிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் உள்ளூர் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஷார்ஜாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், ஷார்ஜாவில் உள்ள தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கு நிர்வாக கவுன்சில் ஒப்புதலும் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, சந்தை ஆய்வுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தயாரிப்பு இணக்கத்தை சரிபார்த்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, வணிக சூழலையும், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையையும் இது அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!