வளைகுடா செய்திகள்

நவம்பர் 1 முதல் பயணத்துக்கு முந்தைய PCR சோதனை அறிக்கை தேவையில்லை..!! கத்தார் சுகாதார அமைச்சகம் தகவல்..!!

கத்தாரில் வரவிருக்கும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை கத்தார் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக  உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக கத்தார் வரும் சுற்றுலாவாசிகளுக்கு வருகைக்கு முந்தைய கொரோனா சோதனை தேவையினை நீக்கவுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், “கத்தாருக்குப் பயணம் செய்வதற்கு முன் சுற்றுலாவாசிகள் இனி எதிர்மறையான கோவிட்-19 PCR அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முடிவானது நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை போட்டியைக் காண வரும் நபர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயமில்லை என கடந்த மாதம் கத்தார் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்பொழுது PCR சோதனையிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கத்தாரின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இனி வெளிநாட்டில் இருந்து கத்தார் திரும்பிய 24 மணி நேரத்திற்குள் PCR அல்லது ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை எடுக்க வேண்டியதில்லை என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள் நவம்பர் 1 முதல் வரும் அனைத்து பார்வையாளர்களையும் உள்ளடக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் முதல் சுற்றுலாவாசிகள் கத்தார் வர தடை விதிக்கப்பட்டிருப்பதும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு உலக கோப்பை போட்டி நடைபெறும் காலங்களில் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் நேரங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!