அமீரக செய்திகள்

துபாயில் சிறிய விபத்துகளில் சிக்கும் ஓட்டுநர்களின் காரை பழுதுபார்க்க புதிய சேவை!! – துபாய் காவல்துறை தொடங்கிய புதுமுயற்சி….

துபாயில் சிறிய விபத்தில் சிக்கியவர்களின் காரை பழுதுபார்க்க புதிய சேவை ஒன்றை துபாய் காவல்துறை தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கப்பட்ட ‘On The Go’ என்றழைக்கப்படும் இந்த புது முயற்சியின் கீழ், சிறிய விபத்தில் சிக்கும் சில வாகனங்கள் இலவசமாகவே பழுது பார்த்துக்கொள்ள முடியும் என்றும் துபாய் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய புதிய சேவையை துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்காக, எனோக் (Enoc) பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கார் பழுதுபார்க்கும் நிறுவனமான ஆட்டோப்ரோவுடன் (Autopro) துபாய் காவல்துறை கைகோர்த்துள்ளது.

ஏற்கனவே, நீண்டகாலமாக Enoc பெட்ரோல் நிலையங்களிடமிருந்து துபாயில் நடக்கும் சிறிய விபத்துகளின் அறிக்கைகளை துபாய் காவல்துறை பெற்று வந்தாலும், தற்போதைய புது முயற்சியானது விபத்து பதிவு செய்யப்பட்டவுடன், ஓட்டுநர்கள் தங்கள் கார்களை விரைவில் பழுதுபார்க்க அனுமதிக்கிறது.

எவ்வாறு செயல்படுகிறது?

முதலில் Enoc நிலையத்தில் சிறிய விபத்து அறிக்கையைப் பெற்றதும், ஆட்டோப்ரோ கடைக்குச் செல்ல வேண்டும். அங்கு அங்கீகரிக்கப்பட்ட ஒர்க் ஷாப்புக்கு சேதமடைந்த வாகனம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் இறுதியாக, பழுதுபார்க்கப்பட்ட பிறகு, வாகனம் ஓட்டுநரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

செலவு:

இந்த சேவையின் கீழ், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக பழுதுபார்த்துத் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இவர்களை தவிர மற்றவர்களுக்கு 150 திர்ஹம் இந்த சேவையை பெறுவதற்கான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!