அமீரக செய்திகள்

துபாய் ஆட்சியாளரின் உத்தரவு..!! ஒரு இலட்சம் கோல்டன் விசாக்களை வழங்கவுள்ள அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அமீரகத்தின் கோல்டன் விசா அளிக்கப்பட்டு 10 ஆண்டுகள் அமீரகத்தில் தொடர்ந்து தங்க கடந்த ஒரு சில வருடங்களாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பிரிவில் தற்பொழுது ஸாஃப்ட்வேர் கோடிங்கில் சிறந்து விளங்கும் திறமையானவர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கோடிங்கில் (coding) சிறந்து விளங்கும் திறமையான 100,000 நபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 10 ஆண்டு கோல்டன் விசாக்களை வழங்கவுள்ளது.

கோடர்களுக்காக (coders) புதிதாக தொடங்கப்பட்ட இந்த தேசிய திட்டமானது, தொழில்முனைவோர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதற்கு வெளியில் மற்ற உலக நாடுகளில் உள்ள கணினி நிரலாக்கத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கோல்டன் விசா விண்ணப்பங்களைப் பெறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

100,000 கோல்டன் விசாக்கள் வழங்கும் திட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அவர்களின் கட்டளைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

கோடிங் துறையில் நிபுணத்துவம் வாய்ந்து சிறந்த தகுதிவாய்ந்தவர்கள் மற்றும் பட்டதாரிகளை ஈர்க்கும் முயற்சியாக, மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அல்லாதவருக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,000 பெரிய டிஜிட்டல் நிறுவனங்களை நிறுவுவதற்கும், நாட்டின் டிஜிட்டல் சந்தையை உருவாக்குவதற்கும், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் விரைவான உலகளாவிய மாற்றங்களைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய படைப்பாற்றல் மற்றும் புதுமையைக் கொடுப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் தேசிய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைதூர பணி பயன்பாடுகளுக்கான மாநில அமைச்சர் சுல்தான் அல் ஓலாமா, கோடிங்கில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசாவைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பை வழங்குவது கோடிங் துறையில் சிறந்த சர்வதேச திறன் மற்றும் திறமைகளை ஈர்க்கவும் ஊக்குவிக்கவும் இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த புதிய நிறுவனங்களை நாடு தழுவிய அளவில் நிறுவுவதற்கு வசதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் சிறந்த சேவைகள் மற்றும் ஆதரவு அமைப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விண்ணப்ப செயல்முறை மற்றும் தகுதி

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் அலுவலகம் அல்லது அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) மூலம் கோடிங்கில் சிறந்து விளங்கும் அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து வயதினரும் ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிவாய்ந்த நபர்களுக்கு கோல்டன் விசா வழங்க பொறுப்பான அரசு நிறுவனங்களால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

கோடிங்கில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முன்னோடியாக பணியாற்றுவோர், மென்பொருள் பொறியியல் (software engineering) கணினி அறிவியல் (computer science), வன்பொருள் பொறியியல் (hardware engineering), தகவல் தொழில்நுட்பம் (information technology), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), தரவு அறிவியல் (data science), பெரிய தரவு (big data) மற்றும் மின் பொறியியல் (electrical engineering) பட்டதாரிகளில் கோடிங்கில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இதில் அடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!