வளைகுடா செய்திகள்

சவூதி: உலகிலேயே முதன் முதலாக தானியங்கி மருந்து இயந்திரம் அறிமுகம்..!! மருந்து வாங்க இனி மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை…

உலகிலேயே முதல்முறையாக சவுதி அரேபியாவில், மருந்துகளை வழங்குவதற்காக தானியங்கி இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம், சவூதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கிங் சல்மான் ஆயுதப்படை மருத்துவமனையில் முதன்முறையாக மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக அமைத்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் தொழில்நுட்பத் துறையில் சவுதி அரேபியா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வரும் நிலையில், இந்த சாதனை அதன் வரிசையில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், நோயாளி மருந்துகளை வாங்க மருத்துவமனைக்கு செல்ல அவசியம் இல்லை. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு இருந்தாலே போதும், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் ஒரு நிமிடத்தில் எளிதாக மருந்தினை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் மருந்துகளை வழங்கும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமானது மருந்துகளின் பரிந்துரைக்கப்பட்ட பார்கோடு, பயனாளிகள் பயன்படுத்துவதற்கான டச் ஸ்கிரீன் ஆகியவற்றினை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் சேவை செய்யும் திறனை கொண்ட இந்த இயந்திரமானது 102 முதல் 700 மருந்துகள் வரை சேமிக்கும் திறன் கொண்டதாகும். மருந்துகள் சேதமடையாமல் இருப்பதற்கும், திருடுபோகாமல் இருப்பதற்கும் உயர்ரக பாதுகாப்புடன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது நோயாளிகள் தினமும், மாதாந்திர அல்லது ஆண்டு அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பற்றிய புள்ளி விவரங்களை சேமிக்கும் திறன் பெற்றது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் மருந்தகத் துறையின் இயக்குநர் இது குறித்து கூறும் பொழுது “மருந்துச் சீட்டுடன் இணைக்கப்பட்ட பார்கோடை ஸ்கேன் செய்து தேவையான தரவை நிரப்புவதன் மூலம் இயந்திரம் செயல்படுகிறது, பின்னர் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள விநியோக இயந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவார்கள். மருத்துவமனையின் மருந்து வழங்கும் அதிகாரி மின்னணு முறை மூலம் ஆன்லைனிலேயே பயனாளியின் மருந்துச் சீட்டுத் தரவைச் சரி பார்க்கின்றார்” என்று கூறியுள்ளார்.

மேலும் “அவரால் அங்கீகரிக்கப்பட்ட உடன், பயனாளிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் குறியீடு மற்றும் இயந்திரத்தின் இருப்பிடம் அடங்கிய sms ஒன்றினை தொலைபேசி வாயிலாக பெறுவார்கள். SMS-ல் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு சென்று, எண்ணிற்கு வந்த குறியீட்டை இயந்திரத்திற்குள் உள்ளீடு செய்து, அவர்களுக்கான மருந்துகளை பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.

இந்த இயந்திரம் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டிய மருந்துகளைத் தவிர, எந்தவொரு நோயாளிக்கும் பரிந்துரைக்கப்படும் அனைத்து மருந்துகளையும் சேமிக்கும் திறன் பெற்றது என கூறப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால் மேலும் பல இயந்திரங்கள் சவுதி அரேபியாவின் அனைத்து பகுதிகளுக்கும் படிப்படியாக கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!