வளைகுடா செய்திகள்

விஷன் 2030: பொது பயன்பாட்டிற்காக நாட்டின் முதல் எலக்ட்ரிக் பேருந்தை அறிமுகம் செய்த சவுதி அரேபியா..!!

வாகனங்களில் இருந்து வரக்கூடிய புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் விதமாக உலகின் பல நாடுகளும் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. தற்போது சவுதி அரேபியா நாடும் முதல்முறையாக மின்சார பொது போக்குவரத்து பேருந்தை அறிமுகம் செய்ததன் மூலம் அந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் முதன்முறையாக இந்த மின்சார பொது போக்குவரத்து பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த எலெக்ட்ரிக் பேருந்து ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடிய திறன் பெற்றுள்ளது. அதிக செயல்திறனைக் கொண்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பேருந்தினை மற்ற எலெக்ட்ரிக் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது 10 சதவீதத்துக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பேருந்தின் முதல் சேவையை, பொது போக்குவரத்து ஆணையத்தின் (PTA) செயல் தலைவர் அல் ருமைஹ் , ஜெத்தா பகுதியின் மேயர் சாலே அல் துர்கி மற்றும் சவுதி பொது போக்குவரத்து நிறுவனத்தின் (SAPTCO) தலைவர் காலித் அல் ஹோகைல் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.

SAPTCO ஆல் இயக்கப்படும் இந்த நவீன எலக்ட்ரிக் பேருந்துகள் ஜெத்தாவின் பொது போக்குவரத்து வழித்தடங்களிலும், பிரின்ஸ் சவுத் அல் பைசல் ஸ்ட்ரீட் (Prince Saud Al Faisal Street) மற்றும் மதீனா சாலை வழியாக கலிதியா (Khalidiyah) மற்றும் பலாட்த் (Balad) இணைக்கும் A7 வழித்தடத்திலும் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கலிதியா, ரவுதா (Rowdah), ஆண்டலஸ் (Andalus), ருவைஸ் (Ruwais) மற்றும் பாக்தாதியா (Baghdadiyah) ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இந்த சேவையை பெற முடியும்.

அதுபோல, இந்த ஆண்டு ஜாசன் (Jazan), சபியா (Sabya), அபு அரீஷ் (Abu Arish), தைஃப (Taif) மற்றும் காஸ்ஸிம் (Qassim) போன்ற சிறிய நகரங்களிலும் எலக்ட்ரிக் பொது போக்குவரத்து சேவைகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து தபூக் (Tabuk), அல் அஹ்சா (Al Ahsa) போன்ற நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கும் மின்சார பொது போக்குவரத்து பேருந்து சேவையை வழங்க திட்டமிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பொது போக்குவரத்து ஆணையத்தின் (PTA) செயல் தலைவர் டாக்டர் அல் ருமைஹ் அவர்கள் கூறுகையில், சவூதி அரேபியா கார்பன் உமிழ்வை 25% குறைக்கும் நோக்கில் தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்துவது உட்பட, போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் பொது போக்குவரத்து ஆணையமானது, “விஷன் 2030” ன் கீழ் நாடு முழுவதும் கார்பன் உமிழ்வை 45 சதவீதம் குறைப்பதற்கான இலக்கை எட்டுவதற்கு மாற்றுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவது மற்றும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை நோக்கமாக கொண்டு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!