ஓமானில் 1.6 மில்லியன்களை கடந்த வாகனங்கள்… NCSI வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்!
ஓமானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் தரவுகளை ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (National Centre for Statistics and Information- NCSI) வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 1,603,376 வாகனங்கள் ஓமானில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
NCSI வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஓமானில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் தனியார் பதிவுகளைக் (Private registration) கொண்ட வாகனங்களின் விகிதம் 79.4 சதவீதமாக உள்ளது, அதாவது 1,273,791 வாகனங்கள் தனியார் பதிவுகளைக் கொண்டுள்ளன. மேலும், 238,512 வாகனங்கள் வணிகப் பதிவு (Commercial registration) செய்து 14.9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், வாடகை வாகனங்கள் 1.8 சதவீதத்துடன் 28,633 ஆகவும், டாக்ஸி வாகனங்களின் எண்ணிக்கை 1.8 சதவீதத்துடன் 28,117 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில், இராணுவ வாகனங்கள் தவிர்த்து மற்ற அரசு வாகனங்கள் 12,167 ஆகவும், பைக்குகள் 6,765 ஆகவும் பதிவாகியுள்ளன. அத்துடன் டிரைவிங் இன்ஸ்ட்ரக்ஷன் வாகனங்களின் எண்ணிக்கை 5,744 ஆகவும், தற்காலிகப் பதிவு (தற்காலிக ஆய்வு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை 7,528 ஆகவும் உள்ளது. அதுபோல, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களின் எண்ணிக்கை 1,280 ஆகவும், தூதரக நிறுவன பதிவுகள் (Diplomatic entity registration) கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை 839 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.