அமீரக செய்திகள்

UAE: இந்தியாவில் அல்லது வேறு நாட்டில் தடுப்பூசி போட்டவர்கள் ‘Al Hosn App’ ல் எவ்வாறு பதிவு செய்வது..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜனவரி 3 ம் தேதி முதல் அனைத்து எமிரேட்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்குள் ஊழியர்கள் மற்றும் விசிட்டர்கள் நுழைய கிரீன் பாஸ் நடைமுறை கட்டாயம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு தளங்கள் போன்ற இடங்களுக்குள் நுழைய அனைவருக்கும் கிரீன் பாஸ் தேவை என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் தடுப்பூசி போட்டவர்களுக்கு அவர்களின் தடுப்பூசி குறித்த தகவல்கள் எமிரேட்ஸ் ஐடி மூலமாக நேரடியாகவே அல் ஹொஸ்ன் அப்ளிகேஷனில் (Al Hosn App) பதிவேற்றப்படும். ஒருவேளை நீங்கள் அமீரக குடியிருப்பாளராக இருந்து, அமீரகத்திற்கு வெளியே இந்தியாவிலோ அல்லது வேறு ஒரு நாட்டிலோ COVID-19 தடுப்பூசியைப் பெற்றிருந்தால், அந்த தகவல்களை அமீரகத்தின் அதிகாரப்பூர்வ தடுப்பூசி பதிவு செயலியான அல் ஹொஸ்ன் அப்ளிகேஷனில் எவ்வாறு பதிவு செய்வது என்று குழப்பமா..?

அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC) அல் ஹொஸ்ன் செயலியில் அமீரகத்திற்கு வெளியே பெறப்பட்ட தடுப்பூசியை பதிவு செய்வதற்கு நிறைவேற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனை படிப்படியாக இங்கே கீழே காண்போம்.

அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை..?

சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளில் நீங்கள் போட்டுக்கொண்ட தடுப்பூசியும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முதல் படியாகும். அவை,

• ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech)

• சினோபார்ம் (Sinopharm)

• ஹயாத்வாக்ஸ் (Hyatvax)

• ஸ்புட்னிக் வி (Sputnik V)

• ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா (Oxford/AstraZeneca)

• மாடர்னா (Moderna)

• கோவிஷீல்டு (Covishield)

• ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

• சினோவாக் (Sinovac)

மேலும், அபுதாபி பொது சுகாதார மைய அறிவிப்பின்படி, தடுப்பூசி அக்டோபர் 1, 2020க்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசி சான்றிதழில் என்னென்ன தகவல்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்..?

அபுதாபி பொது சுகாதார மையத்தின்படி, நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்காக பெற்றுக்கொண்ட சான்றிதழில் பின்வரும் விவரங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவை,

• தடுப்பூசி பெற்றவரின் பெயர்

• தடுப்பூசி பெற்றவரின் அடையாளத்தை குறிக்கும் எண் (எமிரேட்ஸ் ஐடி எண் இல்லை என்றால், பாஸ்போர்ட்டில் உள்ள ஒருங்கிணைந்த எண்)

• தடுப்பூசி பெயர் (அல்லது உற்பத்தியாளர் பெயர்)

• பேட்ச் எண்/லாட் எண்

• தடுப்பூசி போட்டுக்கொண்ட தேதி

• தடுப்பூசி போடப்பட்ட இடம் (நாட்டின் பெயர் உட்பட)

தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது..??

மேலே குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை நீங்கள் பூர்த்தி செய்தால், உங்களின் மருத்துவ மதிப்பீட்டிற்காக அபுதாபியில் உள்ள அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் (SEHA) அல்லது முபதாலா ஹெல்த்கேர் போன்ற அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களின் மருத்துவ மதிப்பீட்டிற்கு பிறகு தடுப்பூசியை பதிவு செய்ய அங்கீகார அறிக்கை மருத்துவ மையத்தால் வழங்கப்பட்டு அல் ஹொஸ்ன் அப்ளிகேஷனில் பதிவேற்றப்படும்.

உங்களின் தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல்கள் அல் ஹொஸ்ன் அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, கிரீன் பாசை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை COVID-19 PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இது குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு அபுதாபி ஹெல்த் சர்வீஸின் 80050 என்ற கஸ்டமர் கேர் எண்ணிலோ அல்லது முபதாலா ஹெல்த்கேரின் 8004959 என்ற கஸ்டமர் கேர் எண்ணிலோ தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!