அமீரக செய்திகள்

UAE: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை விதித்த அபுதாபி..!! சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் கீழ், அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் வரும் ஜூன் 2022 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என சுற்றுசூழல் அதிகாரிகள் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 06) அறிவித்துள்ளனர்.

அமீரகத்தில் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திட்டங்களில் ஒரு பகுதியாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அபுதாபியின் ஒருங்கிணைந்த ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் கொள்கையின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபியின் சுற்றுச்சூழல் ஏஜென்சி (EAD) கூறுகையில், அபுதாபி முழுவதும் நுகரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவை படிப்படியாக குறைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் பயன்பாட்டை பொதுமக்களிடம் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பிளாஸ்டிக் கப், மூடி மற்றும் பிளாஸ்டிக் கத்தி உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சுமார் 16 பிளாஸ்டிக் பொருட்களுக்கான தேவையை குறைக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தவும் EAD திட்டமிட்டுள்ளது.

மேலும் கூடுதலாக வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் ஒற்றைப் பயன்பாட்டு தட்டுகள் மற்றும் உணவு டெலிவெரிக்கு பயன்படுத்தும் கண்டைனர்கள் உள்ளிட்ட பொருட்களையும் படிப்படியாக நிறுத்தவும் திட்டம் இருப்பதாக அபுதாபியின் சுற்றுச்சூழல் ஏஜென்சி (EAD) தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான சூழல் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்புடைய மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் விரிவான கொள்கைகள் உருவாக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடம் ஒற்றை பயன்பாட்டு தண்ணீர் கேன்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக “துபாய் கேன்” எனும் இலவச குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் 500மிலி அளவிற்கு சமமான 234,000க்கும் அதிகமான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேன்களின் தேவை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் துபாய் கேன் திட்டத்தின் மூலம் 117,000 லிட்டர் தண்ணீரை குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இலவசமாக பயன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிளாஸ்டிக்கை ஒழிக்கும் ‘துபாய் கேன்’ திட்டம்..!! 117,000 லிட்டர் தண்ணீரை இலவசமாக பயன்படுத்திய குடியிருப்பாளர்கள்..!!

மேலும் படிக்க: இனி உங்கள் காலி பாட்டில்களில் இலவசமாக தண்ணீர் நிரப்பிக்கொள்ளலாம்.. துபாய் இளவரசரின் புதிய திட்டம்.. எங்கெல்லாம் இந்த வசதி..??

Related Articles

Back to top button
error: Content is protected !!