அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடங்கிய கோடைகாலம்.. புழுதிப்புயலில் பின்பற்ற வேண்டிய 5 சாலை விதிகளை வெளியிட்ட RTA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிலையற்ற வானிலை நிலவி வருவதால், நாட்டில் ஆங்காங்கே புழுதிப் புயல், கடும் மூடுபனி அல்லது மழை போன்ற தீவிர வானிலை மாற்றங்களை அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் காவல்துறை அதிகாரிகளும் தேசிய வானிலை ஆய்வு மையமும் (NCM) உடனடியாக எச்சரிக்கைகளை வெளியிட்டு, சாலைகளில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியும் வருகிறது.

புழுதிப் புயலின் போது வாகனம் ஓட்டுவது சவாலானதாக இருக்கலாம் என்றும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவுத்திறன் (visibility) குறைவதால் மட்டுமின்றி, டயர்களில் மணல் சறுக்கல்களின் காரணமாகவும் விபத்துகள் ஏற்படலாம் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எச்சரித்துள்ளது. ஆகவே, சாலையில் பாதுகாப்பாக இருக்க, வாகன ஓட்டிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விதிகளை கீழே காணலாம்.

1. வாகனம் ஓட்டுவதற்கு முன் – காரின் ஹெட்லைட்களை சரிபார்த்தல்:

புழுதிப்புயல் சாலையில் பார்வைத் திறனை வெகுவாகக் குறைக்கும் என்பதால், நீங்கள் புறப்படுவதற்கு முன்பு உங்கள் காரின் ஹெட்லைட்கள் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். எனவே, கார் ஹெட்லைட்கள் அனைத்தும் நன்றாக வேலை செய்வதை உறுதி செய்வதுடன் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு RTA வலியுறுத்தியுள்ளது.

2. மெதுவாக செல்லுதல்:

உங்களை நோக்கி வரும் வாகனங்களில் இருந்து வரும் தூசி எதிர்பாராத ஆபத்துக்களை விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் வாகனத்தை திடீரென நிறுத்துவது உங்களுக்கு கடினமான காரியமாக இருக்கலாம்.

3. வாகனம் ஓட்டும் போது படங்களையோ வீடியோக்களையோ எடுக்க வேண்டாம்:

சாலைகளில் பார்வைத்திறன் குறைந்த நிலையில் வாகனம் ஓட்டும்போது, ​​கவனம் சிதறாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இது குறித்து அபுதாபி காவல்துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “உங்கள் பாதுகாப்புக்காகவும் சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும், வீடியோக்களை எடுப்பதன் மூலமோ அல்லது உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதன் மூலமோ திசைதிருப்ப வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.

4. சாலையில் செல்லும் போது அபாய விளக்குகளை (hazard lights) பயன்படுத்தாதீர்கள்:

தூசி நிறைந்த சூழலில் வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உள்துறை அமைச்சகமும் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, வாகனம் ஓட்டும்போது அபாய விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், உங்கள் பாதையில் செல்வதை உறுதிசெய்யுமாறும் வாகன ஓட்டிகளுக்கு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

5. ஜன்னல்களை மூடுதல்:

புழுதிப்புயலில் வாகனம் ஓட்டும் போது சாலை தூசி நிறைந்ததாக இருந்தால், உங்கள் ஜன்னல்களை மூடிவிட்டு பாதுகாப்பிற்காக ஏசியை இயக்கலாம் என RTA கூறியுள்ளது. மேலும், புழுதிப்புயலில் வாகனம் ஓட்டும் போது, ​​கவனமாக இருக்கவும், ஓட்டுநர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சாலையில் ஏதேனும் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும் RTA வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!