அமீரக செய்திகள்

UAE: பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி ஸ்டிக்கர் தேவையில்லை.. அமலுக்கு வந்த புதிய எமிரேட்ஸ் ஐடி.. துபாய்க்கு மட்டும் பொருந்தாது..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) மே 16, 2022 முதல் துபாய் தவிர அனைத்து வகை குடியிருப்பாளர்களுக்கும் தனித்தனி எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸி ஸ்டிக்கர் வழங்குதல்/புதுப்பித்தல் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அதாவது அமீரகத்தில் மே 16 முதல் ரெசிடென்ஸி விசா ஸ்டிக்கர்களின் தேவையை எமிரேட்ஸ் ஐடி அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளன. அதன்படி ஒரு நபரின் ரெசிடென்ஸி விவரங்களுடன் கூடிய விசா ஸ்டிக்கர் இனி அவரது பாஸ்போர்ட்டில் இருக்காது. அதற்கு பதிலாக அந்த விவரங்கள் அவரது எமிரேட்ஸ் ஐடியில் சேமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, அடையாளம்  குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஃபெடரல் ஆணையம், இரண்டு தனித்தனி விண்ணப்பங்களை ஒன்றிணைப்பதாக அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்று எமிரேட்ஸ் ஐடி வழங்குவதற்கும் மற்றொன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு விசாவைப் புதுப்பிப்பதற்கும் உண்டானவையாகும். இந்த மாற்றம் குடியிருப்பு மற்றும் அடையாள அட்டை விண்ணப்பங்களை தனித்தனியாக செயலாக்குவதற்குப் பதிலாக ஒன்றிணைக்கிறது.

இதன் மூலம் ரெசிடென்ஸி மற்றும் எமிரேட்ஸ் ஐடியை வழங்குதல் அல்லது புதுப்பித்தல் போன்ற கோரிக்கைகளுக்கான சேவைக்கு ஒரு ஒருங்கிணைந்த படிவம் இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், துபாயில், இந்த இரண்டு விண்ணப்பங்களும் தனித்தனியாக தொடர்ந்து செயலாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றம் ஏன்?

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையின் முடிவிற்குப் பிறகு கடந்த மாதம் இந்த மாற்றங்களை ஆணையம் அறிவித்தது. ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களின் ரெசிடென்ஸி நிலையை அவர்களின் பாஸ்போர்ட் எண் மற்றும் எமிரேட்ஸ் ஐடி மூலம் சரிபார்க்கக்கூடிய இந்த புதிய திட்டம் பற்றி சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு ஆணையத்தால் ஒரு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.

கடந்த காலங்களில், புதிய ரெசிடென்ஸி விசாவிற்கு விண்ணப்பிக்கும் எவரும் அல்லது விசாவைப் புதுப்பிக்கும் போதும், ​​விசா ஸ்டிக்கரைப் பெறுவதற்கு தங்கள் பாஸ்போர்ட்டைச் சமர்ப்பிக்க வேண்டும். தற்போதுள்ள, ​​​​புதிய விதியின்படி மே 16 மற்றும் அதற்குப் பிறகு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு குடியிருப்பாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டிக்கர் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மே 16 க்கு முன் புதிய ரெசிடென்ஸி விசா அல்லது அதை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தவர்கள், அவர்களின் பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட விசா ஸ்டிக்கர் பெறப்படும்.

அதேபோல் மக்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியின் சாஃப்ட் காப்பியைப் பெற ICP  இணையதளம் அல்லது UAEICP என்ற ஸ்மார்ட் ஆப்பினை பயன்படுத்தலாம் என்று ஆணையம் முன்பு கூறியிருந்தது. அடையாள அட்டையை விசா ஸ்டிக்கருக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தின்படி, ரெசிடென்ஸி விசா ஸ்டிக்கர்கள் இனி ஆணையத்தின் ஸ்மார்ட் ஆப் மூலம் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.  

புதிய அடையாள அட்டை

கடந்த ஆண்டு அமீரகத்தில் புதிய தலைமுறை எமிரேட்ஸ் ஐடிகள் வெளியிடப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டையை அதிகாரிகள் ஏற்கனவே வெளியிட தொடங்கிவிட்டனர். புதிய விசா வழங்கல் அல்லது விசாவை புதுப்பித்தல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் எமிரேட்ஸ் ஐடியின் சாஃப்ட் காப்பியைப் பெறலாம்.

குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் புதிய தலைமுறை எமிரேட்ஸ் அடையாள அட்டையில், ரெசிடென்ஸி ஸ்டிக்கரில் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் அடங்கும். இதில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவு, வழங்குபவர் மற்றும் அட்டையின் முகத்தில் உள்ள படிக்கக்கூடிய மற்றும் படிக்க முடியாத தரவு ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!