வரலாற்றுச் சின்னமான தேரா க்ளாக்டவர் ரவுண்டானாவை புதுப்பிக்கும் துபாய் முனிசிபாலிட்டி! – பல தசாப்தங்களாக எமிரேட்டின் அழகியல் தோற்றத்தில் பங்காற்றிய ரவுண்டானா…

துபாயின் பழமையான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான க்ளாக்டவர் ரவுண்டானாவை நவீன வடிவமைப்புகளுடன் புதுப்பிக்க இருப்பதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நகரத்தின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்தவும் துபாய் முனிசிபாலிட்டி திட்டமிட்டுள்ளது. அதன்படி, க்ளாக்டவர் ரவுண்டானாவில் பசுமை மற்றும் பல வண்ண விளக்குகளுடன் தண்ணீர் நீரூற்றின் வடிவமைப்பை மாற்றியமைப்பதற்கான பணிகளை துபாய் முனிசிபாலிட்டி தொடங்கியுள்ளது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி அவர்கள் கூறுகையில், வருங்கால சந்ததியினருக்காக துபாயின் வரலாற்று மற்றும் கட்டடக்கலை அடையாளங்களை பராமரித்து, பாதுகாப்பதன் மூலம், நகர்ப்புற திட்டமிடலை செயல்படுத்தும் நோக்கங்களை அடைய இந்த திட்டம் நகராட்சிக்கு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து துபாய் முனிசிபாலிட்டியின் பொதுப் பராமரிப்புத் துறையின் இயக்குநர் பொறியாளர் ஜாபிர் அல் அலி அவர்கள் பேசிய போது, சுமார் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் இந்த புதுப்பித்தல் பணியில், பழைய தளங்களை மாற்றியமைத்தல், பல வண்ண விளக்குகளை நிறுவுதல், அலங்காரத் தோட்டம் மற்றும் நீரூற்றை புதுப்பித்தல் போன்றவை அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
நவீன வடிவமைப்புகள் என்றாலும் கூட, மைல்கல்லின் வரலாற்று அல்லது கட்டடக்கலை முக்கியத்துவம் பழமை மாறாமல் அப்படியே இருப்பதை ஆணையம் உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் வரலாற்று அடையாளமான தேரா க்ளாக்டவர் ரவுண்டானா, உலகெங்கிலும் உள்ள மிகவும் பிரமிக்க வைக்கும் கடிகார கோபுரங்களில் ஒன்றாகும். மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான இது 1963 இல் கட்டப்பட்டதிலிருந்து பல தசாப்தங்களைக் கடந்து வந்து வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், இது தேரா மற்றும் பர் துபாய் இடையேயான முதல் நிலப் பாதை மற்றும் உம் ஹுரைர் ஸ்ட்ரீட் மற்றும் அல் மக்தூம் ஸ்ட்ரீட் சந்திப்பில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, துபாய்-அபுதாபி சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு, துபாய் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளின் சந்திப்பின் ஆரம்ப புள்ளியாக இது செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் இந்த புதுப்பித்தல் திட்டம், துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்திற்கு (Dubai 2040 Urban Master Plan) ஏற்ப செயல்படுத்தப்படுவதாகவும், அத்துடன் துபாயில் நிலையான நகர்ப்புற வளர்ச்சியைக் அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.