அமீரக செய்திகள்

முதன் முறையாக 3.6 மில்லியனை தாண்டிய துபாயின் மக்கள்தொகை!! 92% பேர் வெளிநாட்டினர்.. வெளியான புள்ளிவிவரத் தகவல்..!!

துபாயின் மக்கள்தொகை முதன்முறையாக 3.6 மில்லியனைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. துபாய் புள்ளியியல் மையம் (Dubai Statistics Centre) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, துபாயின் தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை 3,600,175 ஐ எட்டியுள்ளது.

இந்த எண்ணிக்கையானது, இந்த ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் 33,000 பேரில் ஒரு சதவீதம் அதிகரிப்பையும், 2022 ம் ஆண்டின் இறுதியில் 50,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் 1.5 சதவீதம் அதிகரிப்பையும் குறிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அதிகரிப்பிற்கு துபாயின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, நிலையான சட்டம் மற்றும் சட்டச்சூழல் மற்றும் செழிப்பான பொருளாதாரம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் COVID-19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து, துபாயின் மக்கள்தொகையில் 215,000 பேர் அதிகரித்துள்ளனர், அதாவது 6.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வேலைத் தேடுபவர்கள் அல்லது முதலீட்டாளர்கள் என மேலும் புதிய குடியிருப்பாளர்களையும் துபாய் ஈர்த்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் துபாயின் நகர்ப்புறத் திட்டம் கணிப்பின்படி, மக்கள்தொகை 2040 ஆம் ஆண்டில் 5.8 மில்லியனை எட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகை விவரம்:

கணக்கெடுப்பில் வெளியான தகவலின் படி, துபாயின் மக்கள் தொகையில் 2.438 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் ஆண்கள் 69 சதவீதமாகவும், 1.111 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையுடன் பெண்கள் 31 சதவீதமாகவும் உள்ளனர். குறிப்பாக, இந்த மக்கள் தொகையில் எட்டு சதவிகிதத்தினர் மட்டுமே குடிமக்கள் என்றும் மீதமுள்ள 92 சதவிகிதம் வெளிநாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதுபோல, பொருளாதார ரீதியாக சுமார் 2.864 மில்லியன் மக்கள் அதாவது 81 சதவீத மக்கள் வேலை சந்தையில் தீவிரமாக உள்ளனர். இந்தப் பிரிவில் 73 சதவீத ஆண்கள் உள்ளனர். அதிலும் பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான மக்கள் தொகையில் 29 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 60 சதவீதம் என்று புள்ளிவிவரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

கூடுதலாக, பொதுவாக காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும் பீக் ஹவர்ஸின் போது, ​​துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களுடன் சேர்த்து, துபாயில் பணிபுரியும் மற்ற எமிரேட்டை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்கள் என துபாயின் மக்கள் தொகை 4.729 மில்லியனாக அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மக்கள் தொகையில் பெரும்பாலும் இளைஞர்களே அதிகமாக உள்ளனர். அதில் சுமார் 636,000 பேர் 30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாகவும், 11,559 பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். அதுபோல, 9,216 பேர் 70 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும், 20,000 பேர் 65 முதல் 69 வயதுடையவர்களாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!