அமீரக செய்திகள்

துபாய்: இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட விமான பயண தடை எதிரொலி.. சரிவை சந்தித்த அமீரக விமான நிலையங்கள்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றுநோயின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவியதால், இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகளுக்கு அமீரக அரசு தடை விதித்ததன் எதிரொலியாக அமீரக விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து (passenger traffic) பெரும் சரிவை சந்தித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான பயணிகள் பயணித்துவரும் சூழலில், இந்தியாவில் இருந்து விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் அமீரக விமான நிலையங்களில் கையாளப்படும் பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையில் சுமார் 30 சதவீதம் குறைந்திருக்க கூடும் என்று ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (Airports Council International – ACI) இயக்குநர் ஜெனரல் ஸ்டெபனோ பரோன்சி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலைகளில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எப்போது நிறுத்தப்படும் என்று கற்பனை செய்வது கடினம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பயணிகளை திருப்பி அழைத்து செல்லும் சிறப்பு விமானங்கள் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரையும், அத்தியாவசிய பொருட்களையும் நாட்டிற்கு கொண்டு வருகின்றன. அதேபோன்று இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நாட்டிற்கு விமான பயணத்திற்கு மாற்றாக மாற்றுவழி ஏதும் இல்லை எனவும் பரோன்சி கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 4 இலட்சத்தை எட்டியதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றி வரும் வணிக விமானங்களுக்கு 10 நாள் நுழைவுத் தடையை விதித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து நீடித்து வந்ததன் எதிரொலியாக அமீரக அரசு இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட தடையை காலவரையின்றி நீட்டித்துள்ளது.

இந்த விமான தடையின் காரணமாக இந்தியாவிற்கு விடுமுறைக்காக சென்ற அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், குடும்ப நிகழ்வுகளுக்காக இந்தியா சென்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இந்தியாவில் பயின்று வரும் அமீரக குடியிருப்பாளர்களின் பிள்ளைகள் உள்ளிட்டோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கொரோனாவின் இரண்டாம் அலையின் காரணமாக இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருவது வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மக்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!