அமீரக சட்டங்கள்

வேலையின்மை காப்பீட்டு பதிவுக்கான காலக்கெடுவை நீட்டித்த அமீரக அரசு..!! தவறினால் 400 திர்ஹம் அபராதம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்ததால் (MoHRE) கொண்டு வரப்பட்ட கட்டாய வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு புதிதாக ஜூன் 30 முதல் அக்டோபர் 1, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் ஊழியர்கள்  பதிவு செய்யவில்லையெனில், 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கபட்டுள்ளது.

தன்னிச்சையான வேலைவாய்ப்பு இழப்பு திட்டம் (Involuntary Loss of Employment – ILOE) என்று அழைக்கப்படும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் துறை, மத்திய அரசு மற்றும் ஃப்ரீ ஸோனில் பணிபுரியும் ஊழியர்களும் பயனடைவதற்காக இந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் படி, 16,000 திர்ஹம்களுக்கும் குறைவான மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் – மாதம் 5 திர்ஹமும், 16,000 திர்ஹம்களுக்கு மேல் ஊதியம் பெரும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் 10 திர்ஹமும் சந்தாவாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், காப்பீட்டுச் சந்தாவை செலுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஜூன் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு, தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இத்திட்டத்தில் 4.6 மில்லியன் ஊழியர்கள் இதுவரையிலும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நீட்டிப்பானது தொழிலாளர்கள், இந்த திட்டத்தில் சேருவதற்கு அதிக நேரத்தை வழங்கும் என்றும் குறிப்பாக, இது ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பு ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சில தொழிலாளர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்வருமாறு பார்க்கலாம்.

காப்பீட்டுத் திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்:

  • முதலீட்டாளர்கள்
  • வீட்டு தொழிலாளர்கள்
  • தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள்
  • 1 வருடத்திற்கும் குறைவாக தங்கியுள்ள குடியிருப்பாளர்கள்
  • ஓய்வூதியம் பெற்று புதிய வேலையைத் தொடங்கும் முதியவர்கள்

காப்பீட்டு கொள்கைகள்:

ஒழுங்கீன நடத்தைகளுக்காக அல்லாமல் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது, முந்தைய ஆறு மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 60 சதவிகிதத்தை, வேலை இழந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு இழப்பீடாகப் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு சந்தாதாரர்கள் தொடர்ந்து 12 மாதங்களுக்கு குறையாத காலத்திற்கு திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒழுங்கீன காரணங்களுக்காக அவர்களின் வேலை நிறுத்தப்படவில்லை எனில், வேலையை விட்டு வெளியேறிய 30 நாட்களுக்குள் இழப்பீடு கோரும் விண்ணப்பத்தை ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரம், ஊழியர்கள் வேறொரு வேலையில் சேர்ந்த பின்னரோ அல்லது நாட்டை விட்டு வெளியேறிய பின்னரோ இழப்பீடு பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தா செலுத்துவது எப்படி?

தற்போது வரை சந்தா செலுத்தாத தொழிலாளர்கள் https://www.iloe.ae/ என்ற இன்சூரன்ஸ் இணையதளம் அல்லது இதன் அப்ளிகேஷன , ATM, வணிக சேவை மையங்கள், அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச், வங்கி விண்ணப்பங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பில்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!