UAE: டாக்ஸிகளை முன்பதிவு செய்ய QR முறையை அறிமுகம் செய்த முதல் எமிரேட்.. பயணிகளின் வசதிக்காக புதிய ஸ்மார்ட் சேவை..!!

பொதுப் போக்குவரத்து வசதிகளை பயண்படுத்தும் குடியிருப்பாளர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் டாக்ஸிகளை முன்பதிவு செய்யக்கூடிய முறை அமீரகத்தில் முதலாவதாக ராஸ் அல் கைமாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த QR குறியீடு முன்பதிவு முறையானது, புதிய ஸ்மார்ட் மற்றும் புதுமையான சேனல்கள் மூலம் டாக்ஸி சேவைகளை புக் செய்வதற்காக ராஸ் அல் கைமாவின் போக்குவரத்து ஆணையம் (Rakta) தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது போக்குவரத்து ஆணையத்தின், போக்குவரத்துத் துறையை ஒழுங்குபடுத்துவதில் முன்னோடியாக இருப்பது மற்றும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவது என்ற இலக்குகளுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த சேவையானது ராஸ் அல் கைமா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், எமிரேட்டில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எமிரேட் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
QR முன்பதிவு எப்படி செயல்படுகிறது?
டாக்ஸி சேவையை பயண்படுத்தும் வாடிக்கையாளர்கள், எமிரேட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை மொபைல் போனில் ஸ்கேன் செய்ததும், அவரது தனிப்பட்ட தரவை உள்ளிடுமாறு கேட்கப்படுவார். வாடிக்கையாளர் தரவுகளை உள்ளிட்டதும் கணினி தானாகவே அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து, அந்த இடத்திற்கு அருகில் கிடைக்கக்கூடிய டாக்ஸிகளுக்கு கோரிக்கை அறிவிப்புகளை அனுப்பும்.
கணினி அனுப்பும் கோரிக்கைகளைப் பெறும் டாக்ஸிகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. எனவே, கோரிக்கையை பெறும் டாக்ஸி ஓட்டுநர் டாக்ஸியில் இருந்து புக் செய்த நபருக்கு பதிலளிப்பதுடன், முன்பதிவு செய்தவரின் இருப்பிடத்திற்கு தாமதமில்லாமல் விரைவாக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.