அமீரக செய்திகள்

UAE: சில ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறையை பெறும் வாய்ப்பு..!! ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய பணிமுறைகள்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசாங்க ஊழியர்களுக்கான புதிய பணி முறைகளை அமீரக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பணிமுறைகள், எதிர்வரும் ஜூலை 1, 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய வேலை வகைகள் ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய அறிமுகத்தில், ‘compressed workweek’ என்றழைக்கப்படும் பணி முறை மூலம் புதிய வேலை நேரங்களை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முறையில், ஊழியர்கள் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் என்ற விகிதத்தில் வாரம் நான்கு நாட்களுக்குப் பணிபுரிவதற்குப் பதிலாக, நாளொன்றுக்கு பத்து மணி நேரம் என்ற கணக்கில் வாரத்திற்கு மூன்று நாள்கள் வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசாங்க மனித வளங்களுக்கான பெடரல் ஆணையமானது (FAHR) ஊழியர்களுக்கான வேலை நேரம் மாற்றப்பட்டது குறித்த செய்திகளை மறுத்துள்ளது. அத்துடன் சுருக்கப்பட்ட வேலை வாரம், பல வேலை வகைகளில் ஒன்றைக் குறிப்பதாக ஆணையம் கூறியுள்ளது. மேலும், இந்த பணிமுறையை அமலுக்குக் கொண்டு வருவது குறிப்பிட்ட மற்றும் தெளிவான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுருக்கப்பட்ட வேலை வாரப் பணிமுறையை நிறுவனத்தின் ஒப்புதலுடன் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள், ஊழியர்கள் தங்கள் வேலை வகைகளை பகுதி நேரத்திலிருந்து முழு நேரமாகவோ அல்லது முழு நேரத்திலிருந்து பகுதி நேரமாகவோ மாற்றுவதற்கு கோருவதற்கான வாய்ப்பையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

பகுதி நேர வேலைக்கான வழிகாட்டுதல்களின் படி, ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் மற்றும் அதிகபட்சம் 32 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதாவது, குறைந்தபட்சம் ஒரு நாளாவது மற்றும் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மேல் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெடரல் அமைச்சகங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஊழியர்களுக்கு ஐந்து வெவ்வேறு பணிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, அவையனைத்தும் நிறுவனத்தின் தலைவரின் ஒப்புதலின் கீழ் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

1. ஆன்-சைட் வேலை:

இந்த வேலை வகையில், ஊழியர்கள் அவர்களது அதிகாரப்பூர்வ வேலை நேரங்களில் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பணியிடத்தில் அல்லது நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றில் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.

2. நாட்டிற்குள் தொலைதூர வேலை (Remote work):

இந்த பணிமுறையில், ஊழியர்கள் தங்கள் பணிகளை பணியிடத்திற்கு வெளியே அமீரகத்திற்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் மேற்கொள்ள அனுமதி உண்டு. இந்த ஏற்பாடு அமைச்சரவையால் நிறுவப்பட்ட ரிமோட் ஒர்க் சிஸ்டத்தால் கையாளப்படுகிறது.

3. வெளிநாட்டிலிருந்து தொலைதூர வேலை:

இந்த விருப்பத்தின் கீழ், ஊழியர்கள் வெளிநாட்டில் இருந்து தங்கள் பணிகளை செய்து முடிக்கலாம்.

4. தீவிர வேலை நேரம் அல்லது சுருக்கப்பட்ட வேலை வாரம்:

இந்த வேலை முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள், குறைந்த வேலை நாட்களில் கூடுதல் நேரம் பணிபுரிந்து  முழு அதிகாரப்பூர்வ வாராந்திர வேலை நேரத்தையும் அடையலாம்.

5. கலப்பின வேலை (Hybrid work):

இதில் ஆன்-சைட் மற்றும் ரிமோட் வேலை ஆகிய இரண்டையும் ஊழியர் அவரது தேவைக்கு ஏற்றவாறு நெகிழ்வுத்தன்மையுடன் பணிபுரிய முடியும்.

புதிய விதிமுறைகளானது, வேலைமுறைகளை வரையறுப்பது மட்டுமின்றி, பின்வரும் வேலைவாய்ப்பு வகைகளையும் குறிப்பிட்டுள்ளன:

  1. முழுநேரம்: ஒரு அரசு நிறுவனத்திற்காக தினசரி முழு வேலை நேரம் பணிபுரிதல்.
  2. பகுதிநேரம்: குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை நேரம் அல்லது நாட்களுக்கு வேலை செய்தல்.
  3. தற்காலிகம்: முழு தினசரி வேலை நேரம், ஆனால் ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது தற்காலிக ஒப்பந்தத்தில் வேலை செய்தல்.
  4. நெகிழ்வானது: பணிச்சுமை, பொருளாதார மாறிகள் மற்றும் நிறுவனத்தில் செயல்படும் காரணிகளின் அடிப்படையில் வேலை நேரம் அல்லது வேலை நாட்களை மாற்றும் சாத்தியம் கொண்ட அரசு நிறுவனத்திற்காக வேலை செய்தல்.

Related Articles

Back to top button
error: Content is protected !!