அமீரக செய்திகள்

துபாய்: விசிட்/டூரிஸ்ட் விசாவில் வந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற ‘அவுட் பாஸ்’ தேவை.. புதிய நிபந்தனை என்ன..??

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் தங்களின் விசா காலம் முடிந்து சலுகை காலத்திற்கும் அதிகமாக கூடுதல் நாட்கள் தங்கியிருந்தால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அவுட் பாஸ் அல்லது லீவ் பெர்மிட் பெற வேண்டும் என்ற அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

அமீரகத்தை பொறுத்தவரை விசிட் விசா, டூரிஸ்ட் விசா அல்லது ரெசிடென்ஸ் விசாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் விசா காலம் முடிந்து கூடுதல் நாட்கள் தங்கியிருக்கும் பட்சத்தில், நாட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் கூடுதலாக தங்கியிருந்த நாட்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அபாரதத்துடன் கூடுதலாக அவுட் பாஸ் பெற வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியை துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், நாட்டில் விசா காலத்திற்கும் அதிகமாகத் தங்கியிருக்கும் எவரும், நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்திலோ அல்லது நில எல்லைகளில் உள்ள குடிவரவு அலுவலகங்களிலோ அவுட்பாஸ் அல்லது லீவ் பெர்மிட்டை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை குறித்து பயண முகவர்கள் தெரிவிக்கையில், இந்த செயல்முறை சில நாட்களுக்கு முன்பு தொடங்கியதாகவும், நாட்டில் விசா காலத்திற்கும் கூடுதலாக தங்கியிருப்பவர்கள் அபராத தொகையுடன் கூடுதலாக கட்டணம் செலுத்தி அவுட் பாஸ் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் இதற்கு 200 திர்ஹம்ஸ் முதல் 300 திர்ஹம்ஸ் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை துபாய்க்கு விசிட் விசாவில் வந்து கூடுதல் நாட்கள் தங்கியிருந்து பின்னர் இந்தியாவிற்கு திரும்பிய பயணி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவிக்கையில், கூடுதலாக தங்கியிருந்த நாட்களுக்கான அபராதத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு விமான நிலையம் சென்றதாகவும், இமிகிரேசன் கவுண்டர் சென்ற போது நாட்டில் அதிகமாக தங்கியதற்கான ‘லீவ் பெர்மிட்டை’ பெற வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், மேலும் 240 திர்ஹம்ஸ் செலுத்தும்படி அவரிடம் கேட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

துபாயை பொறுத்தவரை விசிட் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் தங்களின் விசா காலம் முடிந்து நாட்டை விட்டு வெளியேற, விசா காலாவதியாகும் தேதியிலிருந்து 10 நாட்கள் சலுகை காலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!