அமீரக செய்திகள்

அமீரக அதிபரின் சகோதரர் ஷேக் சயீத் காலமானார்..!! நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் சகோதரர் ஷேக் சயீத் பின் சையத் அல் நஹ்யான் (sheikh saeed bin zayed al nahyan) அவர்கள் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஷேக் சயீத்தின் மறைவுக்கு அமீரகத்தின் தலைவர் ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் அவரது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் மறைந்த ஷேக் சயீத்துக்கு அஞ்சலிகள் குவிந்து வரும் நிலையில், அவரது மறைவிற்கு நாடு முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஜூலை 27 (வியாழன்) முதல் ஜூலை 29 (சனிக்கிழமை) வரை மூன்று நாட்களுக்கு கொடிகளை அரைக்கம்பத்தில் வைக்குமாறு ஜனாதிபதி நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, ஜூலை 22ஆம் தேதியன்று ஷேக் சயீத் அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்றும் ஜனாதிபதி நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அபுதாபியில் உள்ள அல் அய்னில் 1965 இல் பிறந்த ஷேக் சயீத், 2010 ஆம் ஆண்டு அபுதாபி ஆட்சியாளரின் பிரதிநிதியாக பொறுப்பேற்றார். மேலும், அபுதாபியில் திட்டமிடல் துறையின் (Department of Planning) துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேசமயம், மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பிரதிநிதியாகவும் செயல்பட்டார்.

அபுதாபி நிர்வாகக் குழுவின் (ADCED) முன்னாள் உறுப்பினரான மறைந்த ஷேக் சயீத், அபுதாயின் கடல்சார் துறைமுக ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!