அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் இந்த 7 விசாக்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லை..!! விசா நெறிமுறைகளை புதுப்பித்துள்ள அரசு..!!

சொந்த ஊரில் இருந்து அமீரகத்திற்கு விசா எடுத்து வர நினைப்பவர்கள் விசாவிற்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்க வேண்டுமே என நினைக்கலாம். ஸ்பான்சர்ஷிப் இருந்தால் மட்டுமே அமீரகத்தில் விசாவில் தங்க முடியும் என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால் அமீரகத்தில் ஸ்பான்சர்ஷிப் இல்லாமலும் விசாக்கள் வழங்கப்படுவது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

அமீரக அரசானது அதன் புதிய விசா வகைகளை அறிமுகப்படுத்தியதுடன் விசா முறையை அக்டோபர் 3, 2022 முதல் புதுப்பித்துள்ளதால், பின்வரும் ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசா விருப்பங்களுக்கு ஸ்பான்சர் செய்ய தனிநபரோ, நிறுவனமோ மற்றும் விமான நிறுவனமோ அல்லது ஹோட்டலோ தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் 7 விசா வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சொந்தமாக ஸ்பான்சர் இன்றி விண்ணப்பிக்கலாம்.

1. கோல்டன் விசா:

கோல்டன் ரெசிடென்ஸ் விசா மூலம் நீங்கள் 10 வருடத்திற்கு நாட்டில் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் தங்கலாம். இந்த விசா பெரும்பாலும், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றிகரமான உரிமையாளர், தனித்துவமான திறமையாளர்கள், விஞ்ஞானிகள், சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், மனிதநேய முன்னோடிகள் மற்றும் Covid-19 பரவலின் போது சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் போன்றவர்களுக்கே வழங்கப்படுகிறது.

கோல்டன் விசாவின் நன்மைகள்:

  1. கோல்டன் விசாவிற்கு ஸ்பான்சர் இல்லாமல் நீங்களே விண்ணப்பிக்கலாம் என்பது உட்பட இது ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.
  2. அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் கால அளவு கோல்டன் ரெசிடென்ஸை ரத்து செய்யாது. பொதுவாக, ஆறு மாதங்களுக்கும் மேலாக அமீரகத்திற்கு வெளியே தங்கியிருந்தால் ரெசிடென்ஸ் விசா செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
  3. வயது வரம்பு இல்லாமல் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸ்.
  4. ஸ்பான்சர் செய்யக்கூடிய வீட்டு உதவியாளர்களுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
  5. கோல்டன் ரெசிடென்ஸின் அசல் வைத்திருப்பவர் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடியிருப்பு அனுமதி முடியும் வரை நாட்டில் தங்கலாம்.
  6. அதுமட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் அமீரகம் வந்து கோல்டன் விசா விண்ணப்ப செயல்முறையை முடிப்பதற்கு வசதியாக, ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் சிறப்பு மல்ட்டிப்பிள் என்ட்ரி விசா வழங்கப்படும்.

2. ரெசிடென்ஸ் விசா:

அமீரக அமைச்சரவையின் அறிவிப்பின் படி, பின்வரும் ரெசிடென்ஸ் விசா வகைகளுக்கு உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லை:

  • தொலைதூர வேலை குடியிருப்பு (remote work residency) (ஒரு வருட விசா)
  • ஓய்வு பெற்ற குடியிருப்பு (retired residency) (ஐந்தாண்டு விசா)
  • ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் குடியிருப்பு (இரண்டு ஆண்டுகள்)

3. கிரீன் விசா:

ஐந்தாண்டுகள் செல்லுபடியாகும் கிரீன் விசா பின்வரும் வகைகளின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் சுய ஸ்பான்சர்ஷிப்பில் விசாவைப் பெறலாம்:

  • ஃப்ரீலான்ஸர்கள்
  • திறமையான ஊழியர்கள்
  • முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள்

4. ஐந்தாண்டு மல்ட்டிப்பிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா:

நீங்கள் ஸ்பான்சர் இன்றி அமீரகத்திற்கு ஐந்து வருட சுற்றுலா விசாவைப் பெறலாம். ஆனால், நீங்கள் தங்கியிருக்கும் போது அமீரகத்தில் செல்லுபடியாகும் சுகாதார காப்பீட்டின் நகலையும், குறைந்தபட்சம் $4,000 (Dh14,692) அல்லது வெளிநாட்டு நாணயங்களில் அதற்கு சமமான தொகையுடன் இருக்கும் வங்கி அறிக்கையின் கடந்த ஆறு மாதங்களுக்கான நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

5. உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க விசிட் விசா:

அமீரகம் அறிமுகம் செய்துள்ள புதிய விசிட் விசாக்கள் குறித்த அமைச்சரவையின் அறிவிப்பின் படி, உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லாமல், உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க விசிட் விசாவிற்கு சுயமாக விண்ணப்பிக்க முடியும்.

6. வேலை தேடுபவர்களுக்கான விசா:

நீங்கள் அமீரகத்தில் வேலை தேடும் பொருட்டு விசிட் விசாவிற்கு விண்ணப்பித்தால், உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லை. இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாத விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் அமீரகம் பட்டியலிட்டுள்ள உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தவராக இருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விசா IIT-ல் படித்தவர்களுக்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

7. வணிக வாய்ப்புகளை ஆராய விசா:

நீங்கள் அமீரகத்தில் பிசினஸ் செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய விசிட் விசாவை வின்னப்பிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் தேவையில்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!