அமீரக சட்டங்கள்

பெற்றோர்கள் துணையின்றி பள்ளி குழந்தைகள் துபாய் மெட்ரோவில் பயணிக்கலாமா? RTA வின் ‘unaccompanied minor policy’ கூறுவது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல துபாய் மெட்ரோ அல்லது பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம்.

ஆனால், துபாயின் பொதுப் போக்குவரத்தை பள்ளி செல்லும் குழந்தைகள் பெற்றோர் துணையின்றி பயன்படுத்துவதற்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ‘unaccompanied minor policy’ என்ற கொள்கையைக் கொண்டுள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இது குறித்து பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தை துணையின்றி பயன்படுத்த நியமிக்கப்பட்டுள்ள வயது வரம்பு:

RTA இன் ‘அன் அகம்பனிட் மைனர் பாலிசி (unaccompanied minor policy)’யின் படி, எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையின்றி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதேநேரம், எட்டு முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள், பொதுப் போக்குவரத்தில் தனியாக பயணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும். அந்த வகையில், இந்த வயதினருக்கு (8 முதல் 11 வயது வரை) அனுமதி சீட்டை (permission slip) வழங்குமாறு RTA கால் சென்டர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, குழந்தையின் முழுப்பெயர், பெற்றோரின் முழுப்பெயர் மற்றும் குழந்தை தனியாக பயணம் செய்ய பெற்றோர் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்ற விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், இன்டர்சிட்டி பேருந்துகளைத் தவிர்த்து, குழந்தைகள் தனியாகப் பயணிக்க பெற்றோரில் ஒருவரால் குழந்தையின் நோல் கார்டு வழங்கப்பட வேண்டும் என்று RTA அறிவுறுத்தியுள்ளது. இவற்றுடன் தனது எமிரேட்ஸ் ஐடி மற்றும் குழந்தையின் எமிரேட்ஸ் ஐடியின் நகலையும் பெற்றோர் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெரியவர்களின் துணையின்றி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த வயதினர் அடிக்கடி பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில், பெற்றோர்கள் மாணவர் நோல் கார்டுக்கு (student nol card) விண்ணப்பிப்பது நல்லது.

ஏனெனில், மாணவர் நோல் கார்டைப் பயன்படுத்தி துபாய் பஸ், மெட்ரோ மற்றும் டிராம் ஆகியவற்றில் உங்கள் குழந்தைகள் பயணிக்கும் போது, 50 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். மாணவர் நோல் கார்டுக்கு விண்ணப்பிக்க, மாணவரின் எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்ட நீல நிற நோல் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

5 முதல் 23 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மாணவர் நோல் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பற்றி கீழே பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியின் நகல் (முன் மற்றும் பின்புறம்)
  • வெள்ளை பின்னணியுடன் தனிப்பட்ட புகைப்படம்
  • விண்ணப்பதாரர் அமீரகத்தில் உள்ள பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் என்பதை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணம்.

இந்த மாணவர் நோல் கார்டு (student nol card) ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்லுபடியாகும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் வரை ஒவ்வொரு ஆண்டும் கார்டை புதுப்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!