வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா..!! உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்….

இந்தியாவில் குறைந்தளவு பெய்த மழையால் பயிர்கள் சரியாக விளையாததன் காரணமாக நாட்டின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு அதிக ஏற்றுமதி வரியை விதிப்பதாக இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரி விதிக்கப்பபடுவதாகவும் இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 4.87% ஆக இருந்த இந்தியாவின் வருடாந்திர சில்லறை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் 7.44% ஆக கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், உணவுப் பணவீக்கம் 11.51% ஐ எட்டியுள்ளது என்றும் அதாவது, ஜனவரி 2020க்குப் பிறகு உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தக்காளி, வெங்காயம், பட்டாணி, கத்தரி, பூண்டு மற்றும் இஞ்சி உள்ளிட்ட இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எல் நினோ என்ற வானிலை முறை காரணமாக, இந்தியா ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தனது வறண்ட ஆகஸ்ட் மாதத்தை நோக்கி செல்வதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், நாட்டின் பல பகுதிகளில் மிகக் குறைந்த மழைப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டு எனும்போது, ஆகஸ்ட் மாத மழையானது 1901 இல் இருந்து ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலைக் குறைக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அரிசி முதல் சோயாபீன்ஸ் வரை, விலை உச்சத்தை எட்டும் மற்றும் ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது ஜூலை 2020 க்குப் பிறகு அதிகபட்சமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே உள்நாட்டில் இவற்றின் தேவையை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏற்றுமதி வரியை 40 சதவீதத்திற்கு விதிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை இனி உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.