அமீரக செய்திகள்

ஓமான்: சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் ஓடிய நபர்… விபத்துக்குள்ளான ஆசிய நாட்டவர் மரணம்..!!

ஓமானில் உள்ள சட்டத்தின் படி சாலைகளில் விபத்து நடந்து விட்டால், விபத்துக்கு காரணமான ஓட்டுனர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், மஸ்கட்டில் நடந்த விபத்தில், ஆசிய நாட்டவரை வாகனத்தில் வந்து மோதிய வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்தை விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது விபத்துக்குள்ளானவர் மரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்துள்ளனர். மேலும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட புதிய போக்குவரத்துச் சட்டத்தின் படி, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் விபத்து நடந்த இடத்தை விட்டு செல்வது கடுமையான குற்றமாகும் எனவும், அப்படி செல்பவர்களின் மேல் கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் ராயல் ஓமன் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிமுறைகளின் படி விபத்து ஏற்பட்ட பின் அனைத்து நடவடிக்கைகளும் முடிவதற்குள் விபத்து நடந்த இடத்தை விட்டு வெளியேறும் ஓட்டுநர்களுக்கு 35 ஓமான் ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மேலும் இரண்டு கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது

போக்குவரத்துச் சட்டம், பிரிவு 38 கீழ் வாகனத்தின் ஓட்டுநர், போக்குவரத்து விபத்தில் சிக்கி அதன் மூலம் காயம் ஏற்பட்டாலோ அல்லது தனியார் மற்றும் அரசாங்க சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆம்புலன்ஸ் அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் பிரிவு 39 இன் கீழ் மோட்டார் வாகனத்தின் உரிமையாளர், அல்லது வாகனத்தை வைத்திருப்பவர், சம்பந்தப்பட்ட விபத்தில் தன் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்கப்படும் வரை குற்றத்திற்கு அவரே பொறுப்பாளர் ஆவார்.

ஒருவேளை, உரிமையாளருக்கு சம்பந்தமான வாகனத்தை வேறு ஒருவர் எடுத்துச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருந்தால், சம்பந்தப்பட்ட நபரை பற்றி முழு விவரத்தையும் வாகனத்தின் உரிமையாளர் போலீசாரிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார். இதனை மீறும் பட்சத்தில் வாகனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!