வளைகுடா செய்திகள்

வெளிநாட்டினரின் வேலை நியமனத்திற்கு புதிய சட்டத்தை கொண்டு வரவிருக்கும் குவைத்..!!

குவைத் நாட்டினர் அல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு சேர்க்க, அரசு புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி வரும் அக்டோபர் 26-ம் தேதி தொடங்க உள்ள அடுத்த கட்ட சட்டசபை கூட்டத்தொடரில் சிவில் சர்வீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், அதன் கீழ் வெளிநாட்டவர்களை அரசு நியமனம் செய்வதற்கு புதிய விதிமுறைகள் சேர்க்கப்படும் என்றும் நாடாளுமன்ற மனிதவளக் குழு அரசுக்கு தெரிவித்துள்ளது.

இந்தத் திருத்தங்களில் மிக முக்கியமானது, குவைத் அல்லாதவர்களின் வேலை நியமனம் ஆகும். இதன்படி அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து அதிகாரபூர்வ அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வமான செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்ற முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த புதிய வெளிநாட்டினர் வேலை நியமன முடிவுகளுக்கு எதிரான புகார் அல்லது மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு திறந்திருக்கும். குவைத் நாட்டவர் அல்லாதவர்களின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கும், வேலைவாய்ப்பு தொடர்பான மீறல்களை நிறுத்துவதற்கும், அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகங்களில் தேவையான தகுதிகளுடன் வேலை வாய்ப்பை அறிவித்த பின்னரே வெளிநாட்டவரை நியமிக்க முடியும் என்பதை திருத்தங்கள் வலியுறுத்துகின்றன.

இதன்மூலம், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குவைத் நாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. ஒரு குறிப்பிட்ட வேலையில், தகுதியின் அடிப்படையில் குவைத் நாட்டினர் வேலை பெற அதிக தகுதியுடையவர்கள் என்று தெரியவந்தால், வெளிநாட்டவரின் நியமனம் நிறுத்தப்பட்டு, அது செல்லாது என்று கருதப்படும்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நியமனம் உடனடியாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் மூலம், எந்த ஒரு வேலைக்கு குவைத் நாட்டினரை நிரப்பியது போக மீதி தேவை உள்ளதோ அந்த வேலைக்கு மட்டுமே வெளிநாட்டவர் விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

எல்லா வேலைவாய்ப்புகளிலும் குவைத் நாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும், குவைத் நாட்டினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் இந்த முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!