அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் எந்தெந்த சூழலில் ஒருவருக்கு பயணத்தடை விதிக்கப்படும்..?? பயணத்தடை விதிப்பதற்கான 7 காரணங்கள் என்ன…??

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்கள் ஒரு சில குற்றங்கள் புரிந்தாலோ அல்லது விதிமீறலில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு அமீரக அரசால் பயணத்தடை விதிக்கப்படலாம். நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் போது மற்றும் விசா காலாவதியான பிறகும் நீண்ட காலம் நாட்டில் தங்கும் போது என பல்வேறு நிகழ்வுகளில் ஒருவருக்கு பயணத்தடை விதிக்கப்படுகிறது.

எனவே, அமீரகத்தில் நீங்கள் எந்த வித குற்றங்கள் புரிந்தால் பயணத் தடை விதிக்கப்படும் என்பது குறித்து கீழே பார்க்கலாம்:

1. விசா காலாவதி:

நீங்கள் விசா காலாவதியான பிறகும், நீண்ட காலம் நாட்டில் தங்கியிருந்தால், உங்களை நாடுகடத்த உத்தரவிடப்படும். அவ்வாறு நீங்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு உங்களுக்கு பயணத் தடை விதிக்கப்படும்.

2. தலைமறைவு வழக்கு (Absconding case):

நீங்கள் வேலையைச் செய்யாமல் தப்பித்ததற்காக, உங்கள் முதலாளி உங்களுக்கு எதிராக ஒரு தலைமறைவு வழக்கைப் பதிவு செய்திருந்தால், உங்கள் மீது பயணத் தடை விதிக்கப்படும். அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, நீங்கள் தொடர்ந்து ஏழு வேலை நாட்களுக்கு வேலைக்குச் செல்லத் தவறினால், உங்களுக்கு எதிராக ஒரு தலைமறைவு வழக்கு அல்லது எதிர்பாராத வேலை கைவிடுதல் (Unexpected Work Abandonment – UWA) அறிக்கையைப் பதிவு செய்ய முதலாளிக்கு உரிமை உண்டு. இந்த தடையை ஸ்பான்சரால் மட்டுமே நீக்க முடியும்.

3. வங்கிக் கடன் நிலுவை:

உங்கள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமலோ அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்தாமலோ இருக்கும் போதும் மற்றும் உங்களின் செக்யூரிட்டி செக் (security cheque) பவுன்ஸ் ஆனதாலோ முழுப்பணத்தை செலுத்துமாறு வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால், உங்களுக்கு பயணத் தடை விதிக்கப்படலாம்.

4. வாடகையை செலுத்தாமல் தமாதப்படுத்துவது:

நீங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் வாடகை நோட்டீஸ்க்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் அல்லது உங்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதற்காக வீட்டு உரிமையாளர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தால், அவர் வாடகை தகராறு மையத்தை (Rental Dispute Centre -RDC) அணுகி புகாரளிக்கலாம். புகாரின் அடிப்படையில், RDC உங்கள் மீது பயணத் தடையை விதித்து, வாடகையை செலுத்த அல்லது வாடகைதாரராக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பிற கடமைகளை நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தும்.

5. உங்களுக்கெதிரான கிரிமினல் வழக்கு:

உங்கள் மீது ஏதேனும் கிரிமினல் வழக்கு இருந்து, போலீஸ் விசாரணை அல்லது நீதிமன்ற வழக்கு நடந்து கொண்டிருந்தால் பயணத்தடை விதிக்கப்படும். அதாவது வழக்கு இறுதியாக தீர்க்கப்படும் வரை நீங்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடையாது. அதேபோல், போதைப்பொருள் பயன்பாடு அல்லது தாக்குதல் போன்ற கடுமையான கிரிமினல் வழக்கில் நீங்கள் தண்டிக்கப்பட்டால், உங்கள் மீது பயணத் தடை விதிக்கப்படலாம், இது நாடுகடத்தப்பட்ட பிறகு நீங்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும்.

6. சில சிவில் அல்லது வணிக வழக்கு:

நீங்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய ஒரு லிமிட்டெட் லையபிலிட்டி நிறுவனத்தின் (Limited Liability Company -LLC) மேலாளராகவோ அல்லது ஒரேயொரு உரிமையாளராகவோ இருந்தால், நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக நிறுவனத்தின் மீது வழக்கு இருக்கும் நிலையில், உங்கள் மீது பயணத் தடை விதிக்கப்படலாம். மேலும், நிறுவனத்தின் பணப்புழக்க புள்ளிவிவரங்கள் மற்றும் நிறுவனம் கடன்களைத் தீர்க்க இயலாது என்பதற்கான ஆதாரம் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை மேலாளர் மீதான பயணத்தடை நீக்கப்படாது.

7. நீங்கள் ஒருவருக்கு உத்தரவாதமாக இருக்கும் சூழல்:

நீங்கள் காவல்துறை அல்லது நீதிமன்ற வழக்கு உள்ள ஒருவருக்கு உத்தரவாதமாக நின்றிருந்தால், அந்த நபருக்கு நீங்கள் உத்தரவாதமளிப்பவராக நிற்கும் நேரத்தில் உங்களால் பயணம் செய்ய முடியாது. ஏனெனில், இது போன்ற நேரங்களில் பெரும்பாலும் உங்கள் பாஸ்போர்ட் காவல்துறை அல்லது நீதிமன்றத்திடம் இருக்கும். மாறாக, பாஸ்போர்ட் உங்களிடம் இருந்தாலும், நீங்கள் உத்தரவாதமளிப்பவராக நிற்கும் போது பயணத் தடையை எதிர்கொள்வீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!