வளைகுடா செய்திகள்

முறையான ஒர்க் பெர்மிட் இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு நியமித்தால் 5,000 ரியால் அபராதம்… தொழிலாளர்களின் நலன்களுக்காக புதிய ஆணையை வெளியிட்ட சவுதி அரசு!

சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) அறிவிப்பின்படி, வொர்க் பர்மிட் இல்லாமல் அல்லது அஜீர் திட்டத்தில் சேர்க்கப்படாமல் ஒரு வெளிநாட்டு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தினால் 5,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன்படி, தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தொழிலாளர்கள் சட்டத்தின் மூலம் அபராதங்கள் திருத்தப்பட்டுள்ளன.

எனவே, அமைச்சர்களின் முடிவுகளுக்கு இணங்க, அமைச்சர் தீர்மானம் எண். 92768 மூலம் மீறல்கள் மற்றும் அபராதங்களின் அட்டவணையை திருத்திய பின்னர் இறுதி வரைவு வடிவமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பினை முதலாளிகள், தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும்.

தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, நிறுவனத்தின் நடவடிக்கைகளிலும் தொழிலாளர்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் கடுமையான மீறலாக கருதப்படும். இந்த மீறலுக்கு 1,500 ரியால் முதல் 5,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், நிறுவனத்தின் வளாகத்தில் தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு முதலாளிகள் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்தில், ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 10 பேர் அல்லது அதற்கு மேல் இருந்தால், குழந்தை பராமரிப்புக்கான நியமிக்கப்பட்ட இடம் அல்லது நர்சரி இல்லாதது கடுமையான விதிமீறல் என்றும், மீறுபவர் 5,000 ரியால் அபராதம் விதிக்கப்படுவார் என்றும் அமைச்சரகம் குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், திருத்தப்பட்ட அட்டவணையின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது கடுமையான மீறலாகும், மேலும் மீறல்களுக்கு 1,000 முதல் 2,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் பிரசவம் முடிந்த ஆறு வாரங்களில் பணிபுரியும் பெண்களை வேலைக்கு அமர்த்துவதும் தீவிரமான குற்றமாகும் என்றும் இதற்கு 1,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பணியமர்த்தப்படும் பொழுது ஆண், பெண் என இரு தொழிலாளர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஊழியம் உள்ளிட்ட அனைத்திலும் சமமாக நடத்தப்பட வேண்டும். பாரபட்சம் காட்டுவது கண்டறியப்பட்டால் 3,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட் அல்லது ரெசிடென்ஸ் அனுமதி (இகாமா) போன்றவற்றை முதலாளி வைத்திருக்கக் கூடாது, இதனை மீறினால் முதலாளிக்கு 1,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில், ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், இதை மீறினால் 300 ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விதி மீறல்கள் காரணமாக அபராதம் செலுத்துமாறு அரசு அறிவிக்கும் பட்சத்தில், அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மீறுபவர் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்படாவிட்டால், தொழிலாளர் சட்டத்தின் நிர்வாக விதிமுறைகளின் விதிகளின்படி அபராதம் செலுத்தப்படும் வரை அமைச்சகத்தால் வழங்கப்படும் சேவைகள் அவருக்கு இடைநிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!