அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் என்ன..?? முதலாளி தொழிலாளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன..?? அமைச்சகம் விளக்கம்..!!

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE), தொழிலாளர்களுக்கான உரிமைகள் பற்றியும் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஏழு செயல்முறைகள் என்ன என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு சமீபத்தில் அறிவுரை வழங்கியுள்ளது. அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதுபோன்ற  சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொண்டல் உடனடியாக அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் 22 அன்று, அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் “அமீரகத்தில் ஒரு தொழிலாளியாக உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் உற்பத்தி மற்றும் புதுமையான பணிச்சூழலுடன் உங்கள் தொழில் நிலைத்தன்மைக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமீரகத்தில் உள்ள முதலாளிகள் தொழிலாளர்களுக்கு பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. உங்கள் அடையாள ஆவணங்களை முதலாளி வைத்திருப்பது:

ஐக்கிய அரபு அமீரகத்தில், தொழிலாளியின் விருப்பமின்றி அவரது பாஸ்போர்ட்டை முதலாளி நிறுத்தி வைப்பது சட்டவிரோதமானது. அதாவது, ஒரு முதலாளி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியருக்கு விசா வழங்குதல், புதுப்பித்தல் போன்ற உத்தியோகப்பூர்வ வேலைகளை மேற்கொள்ளும்போது மட்டுமே அந்த ஊழியரின் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். மேலும், பாஸ்போர்ட் செயல்முறை முடிந்த பிறகு நேரடியாக ஊழியரிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

2. பயண மற்றும் பணி அனுமதிச் செலவுகளை தொழிலாளி செலுத்துவது:

அமீரக தொழிலாளர் சட்டம் – 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33 இன் படி, விசா ஸ்பான்சர்ஷிப் செலவை முதலாளிகளே ஏற்க வேண்டும். அதுமட்டுமின்றி, தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 6 (4) இன் படி, ஒரு முதலாளி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆட்சேர்ப்பு செலவுகளை தொழிலாளியிடம் வசூலிக்கக் கூடாது. அதாவது, ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து எந்தத் தொகையையும் பிடித்தம் செய்யவோ அல்லது விசா கட்டணங்கள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்களைக் கழிக்கவோ முதலாளிக்கு அனுமதி இல்லை.

3. ஆஃபர் லெட்டரில் இருந்து வேறுபட்ட விதிமுறைகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது:

அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி (u.ae), ஒரு வெளிநாட்டுத் தொழிலாளிக்கு வழங்கப்படும் ஆஃபர் லெட்டரில், வேலையின் முக்கிய விவரங்கள் மற்றும் அமீரக தொழிலாளர் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களை சுருக்கமாகக் கூறும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட வேண்டும்.

அதன் பிறகு, இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட்ட ஒரு வெளிநாட்டு தொழிலாளிக்கான ஆஃபர் லெட்டர் சட்ட ஒப்பந்தமாக மாறும். குறிப்பாக, ஆஃபர் லெட்டரில் உள்ள விதிமுறைகளை MOHRE க்கு முதலாளி வெளியிட வேண்டும். ஆஃபர் லெட்டரின் நகல் அமைச்சின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். புதிய ஊழியருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு ஒப்பந்தமானது, முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட்ட ஆஃபர் லெட்டரின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

4. உங்கள் வேலை வாய்ப்பின் நகலை உங்களிடம் வழங்காமல் இருப்பது:

MOHRE இன் படி, முதலாளி தொழிலாளியிடம் வேலை வாய்ப்பின் நகலை கட்டாயம் வழங்க வேண்டும்.

5. சம்பளத்தை சரியான தேதியில் வழங்காமல் இருப்பது:

ஐக்கிய அரபு அமீரகத்தில், வேலை ஒப்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சம்பளம் தருவதாக முதலாளி அல்லது நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நிலுவைத் தேதிக்குப் பிறகு முதல் 15 நாட்களுக்குள் முதலாளி ஊதியத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லையெனில் MOHRE இன் படி, நீங்கள் அவர்கள் மீது நான்கு வகையான சம்பள மீறல்களைப் புகாரளிக்கலாம்:

  1. 15 நாட்களுக்கு மேல் தாமதமாக வரும் சம்பளம்
  2. ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களாக வராத சம்பளம்
  3. கூடுதல் நேர ஊதியம் பெறாமல் இருப்பது
  4. சட்ட விரோதமான சம்பளப் பிடித்தம்

6. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பணியைத் தவிர வேறு பணியை வழங்குவது:

அமீரகத்தில் தொழிலாளர் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேலைக்குப் பதிலாக வேறு வேலையை வழங்குவது சட்ட விரோதமாகும். எவ்வாறாயினும், சில அவசரச் சூழல்களில், குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அல்லது அத்தகைய விபத்தால் ஏற்பட்டவற்றைச் சரிசெய்யும் நோக்கில், தற்காலிகமாக வேறு பணியை வழங்க முதலாளிக்கு அனுமதி இருப்பதாக சட்டம் கூறுகிறது.

7. நீங்கள் விரும்பியபடி, வேலையை விட்டு வெளியேற முடியாமல் இருப்பது:

நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்ய விரும்பினால், உங்கள் முதலாளிக்கு தேவையான நோட்டீஸை வழங்குவது போன்ற ஒரு ஊழியராக உங்கள் கடமைகளை நிறைவேற்றுவது முக்கியம். இருப்பினும், நீங்கள் வெளியேற விரும்பினாலும், உங்கள் வேலையை விட்டு வெளியேற முடியாவிட்டால் அமைச்சகத்திடம் உங்கள் சிக்கலைத் தெரிவிக்கலாம்.

ஆகவே, மேற்கூறிய 7 சட்டவிரோத நடவடிக்கைகளை நீங்கள் எதிர்கொண்டால், அமைச்சகத்திடம் புகாரளிக்கலாம்.

புகாரளிக்க வழிகள்:

  1. 24×7 கால் சென்டர் – 600 590000
  2. சர்வதேச அழைப்பு மையம் – 00971-680276663.
  3. Whatsapp – 971600590000
  4. இணையதளம் –http://mohre.gov.ae.
  5. மின்னஞ்சல்: [email protected]

Related Articles

Back to top button
error: Content is protected !!