அமீரக செய்திகள்

NRI இந்தியர்கள் பாஸ்போர்ட்டில் UAE முகவரியைச் சேர்ப்பது எப்படி? ஆவணம், செலவு, செயல்முறை போன்ற விவரங்கள் அனைத்தும் இங்கே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலமாக வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), அவர்களின் பாஸ்போர்ட்டில் அமீரகத்தின் உள்ளூர் முகவரியைக் குறிப்பிட அவர்களுக்கு அனுமதி உண்டு. இந்திய தூதரகத்தால் வழங்கப்படும் இந்தச் சேவையானது கடந்த 2020 இல் அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சேவையானது இந்தியாவில் சரியான அல்லது நிரந்தர முகவரி இல்லாத வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் (NRI), அவர்கள் வசிக்கும் நாட்டின் இருப்பிட முகவரியைச் சேர்க்க அனுமதிக்கிறது. அதன்படி, அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இந்த சேவையின் மூலம் உள்ளூர் முகவரியை பாஸ்போர்ட்டில் எவ்வாறு சேர்க்கலாம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

2020 ஆம் ஆண்டில் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் உள்ளூர் UAE முகவரியை சேர்க்க விரும்பினால், அவர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போதுள்ள பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்ய முடியாது.

படி 1: முகவரியைச் சேர்க்க விண்ணப்பத்தை நிரப்பவும்:

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் புதிய பாஸ்போர்ட்டை பெறுவதற்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ என இரண்டு வழிகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

— நேரடியாக விண்ணப்பிப்பது – நீங்கள் இந்திய துணைத் தூதரகத்தின் (CGI) அதிகாரப்பூர்வ அவுட்சோர்சிங் சேவை வழங்குனரான BLS இன்டர்நேஷனல் சர்வீசஸ் UAEஇன் BLS சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று, உங்கள் பாஸ்போர்ட்டில் உங்கள் முகவரியை மாற்றுவதற்கான விண்ணப்பத்தைக் கோர வேண்டும். பின்னர் நீங்கள் EAP II படிவத்தை (இந்திய பாஸ்போர்ட்டில் உள்ள இதர சேவைகளுக்கான விண்ணப்பப் படிவம்) பூர்த்தி செய்ய வேண்டும்.

— ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது – ‘Passport Seva at Indian Embassies and Consulates’ என்ற இணையதளத்தின் வழியாகவும் உங்கள் முகவரியை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை நிரப்பலாம். மேலும், https://portal5.passportindia.gov.in/ என்ற லிங்க் மூலம், படிவத்தை பூர்த்தி செய்தவுடன், ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, BLS சேவை மையத்திற்குச் சென்று மீதமுள்ள செயல்முறையை முடிக்க வேண்டும்.

படி 2: BLS மையத்தை அணுகவும்

உங்கள் விண்ணப்பத்தைப் ஆன்லைனில் பூர்த்தி செய்திருந்தால், BLS மையத்திற்கு வந்ததும் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் விண்ணப்ப செயல்முறையை மையத்திலேயே தொடங்கினால், உங்கள் பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்ட உங்கள் உள்ளூர் முகவரி உட்பட நீங்கள் வசிக்கும் எமிரேட், தெருவின் பெயர், பகுதி, வீட்டு எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிவற்றை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.

கூடவே, போலீஸ் சரிபார்ப்புக்கு தேவைப்படும் இந்திய முகவரியையும் நீங்கள் வழங்க வேண்டும். இந்திய முகவரி எனும்போது, உங்கள் பெற்றோர் அல்லது உறவினரின் இந்திய முகவரியை கொடுக்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) படி, இந்திய வெளிநாட்டினருக்கான பாஸ்போர்ட் புதுப்பித்தல் செயல்முறைக்கு போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாகும்.

படி 3: முகவரிக்கான ஆதார ஆவணங்களை வழங்கவும்

உள்ளூர் முகவரியின் விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன், நீங்கள் அமீரகத்தில் வசிக்கும் முகவரியை நிரூபிக்க பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:

  1. செல்லுபடியாகும் அசல் பாஸ்போர்ட்.
  2. நீங்கள் வில்லா அல்லது அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்தால், பதிவுசெய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் அல்லது உரிமைப் பத்திரம். மேலும், இந்த சேவைக்கு விண்ணப்பிக்க, நீங்கள் வாடகைக்கு அல்லது வாங்கிய சொத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி.
  4. உங்கள் எமிரேட்டில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் பயன்பாட்டுக் கட்டண ரசீது.
  • துபாய் குடியிருப்பாளர்களுக்கு – துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (DEWA).
  • அபுதாபி குடியிருப்பாளர்களுக்கு – அபுதாபி விநியோக நிறுவனம் (ADDC).
  • ஷார்ஜாவில் வசிப்பவர்களுக்கு – ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (SEWA).
  • அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜாவில் உள்ள தைத் பகுதியில் வசிப்பவர்களுக்கு – எதிஹாத் நீர் மற்றும் மின்சாரம் (ETIHAD WE)

இந்த கட்டத்தில் உங்கள் தற்போதைய பாஸ்போர்ட்டையும் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் முந்தைய பாஸ்போர்ட் மற்றும் புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை கூரியர் மூலம் பெறுவீர்கள்.

படி 4: கட்டணம் செலுத்தவும்

கூரியர் செலவு உட்பட, சேவையின் ஒட்டுமொத்தச் செலவும் இதில் அடங்கும்:

  • 415 திர்ஹம் – நீங்கள் நிலையான BLS மையத்தைப் பயன்படுத்தினால்.
  • 650 திர்ஹம் – நீங்கள் பிரீமியம் BLS ஓய்வறைகளைப் பயன்படுத்தினால்.

மேலும் இந்த சேவையை முடிக்க சுமார் 10 முதல் 15 வேலை நாட்கள் ஆகும். எவ்வாறாயினும், கோரிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது இந்திய துணைத் தூதரகத்தின் விருப்பத்திற்குரியது. எனவே, செயல்முறை முடிந்ததும் அது குறித்த விபரங்கள் உங்களுக்கு SMS மூலம் தெரிவிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!