அமீரக செய்திகள்

இந்திய அரிசிக்கான தடை எதிரொலி.. அமீரகத்தில் ‘ஒரு கஸ்டமருக்கு இரண்டு அரிசி பைகள்’ என வரம்பை விதித்த சில கடைகள்.. ஆறு மாத கையிருப்பை உறுதி செய்த விற்பனையாளர்கள்.!!

இந்தியாவிலிருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்துள்ள தடையால் அமீரகத்தில் உடனடி பாதிப்பு இருக்காது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி சில்லறை அரிசி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பதால் அரிசி விநியோகம் போதுமானதாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய அரசு விதித்த அரிசி ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக அரசும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிசி உட்பட அனைத்து நாட்டு அரிசிகளையும் அமீரகத்தில் இருந்து ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி (Export & Re-Export) செய்ய நான்கு மாதங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், இந்திய உற்பத்திப் பொருள்களில் நிபுணத்துவம் பெற்ற துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சில கடைகள் வெள்ளை அரிசி விற்பனைக்கு தற்காலிகமாக சில விதிமுறைகளை விதித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல்களின்படி, வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் இரண்டு அரிசி பைகள் என்ற வரம்பை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்:

Majid Al Futtaim ரீடெய்ல் நிறுவனத்தில் Carrefour இன் கன்ட்ரி மேனேஜர் பெர்ட்ரான்ட் லூமாய் (Bertrand Loumaye) என்பவர் இதுபற்றி கூறுகையில், எங்களின் விநியோகத்தில் எந்த இடையூறு இல்லை என்றும் மற்றும் அரிசி வாங்குவதற்கு குறிப்பிட்ட வரம்புகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; “எங்கள் வாடிக்கையாளர்களுக்காக அரிசியை சேமித்து வைப்பதற்காக உள்ளூர் மற்றும் பிராந்திய விநியோகஸ்தர்களுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறோம்” என்றார். அத்துடன், Carrefour ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட சூப்பர் மார்க்கெட்டான லுலுவும் (Lulu) விலையின் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், போதுமான இருப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், இங்கு வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய அரிசியின் அளவுக்கு எந்த வரம்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து லுலு குழுமத்தின் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் டைரக்டர் V.நந்தகுமார் என்பவர் கூறுகையில், “இந்தியா மற்றும் அமீரகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தொடர்பான சமீபத்திய கட்டுப்பாடுகள் எங்களுக்கு எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தவில்லை மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்களின் கிளைகள் தடையற்ற சப்ளை மற்றும் விலையின் நிலைத் தன்மையை உறுதி செய்கின்றன” என்று கூறியுள்ளார்.

அத்துடன் மளிகை சில்லறை விற்பனைத் துறையில் முன்னணி ஸ்டோர்களில் ஒன்றாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் எப்போதும் எங்கள் முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகிறது என்று கூறிய அவர், இதன் காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலான விநியோகத்துடன் போதுமான இருப்புகளை எப்போதும் பரமாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு வாடிக்கையாளர் இரண்டு பாக்கெட்டுகள்:

அமீரகத்தில் உள்ள ஒரு பிரபலமான இந்திய ஸ்டோரான அல் அதில் டிரேடிங், அதன் வாடிக்கையாளர்கள் சில வகையான வெள்ளை அரசியின் இரண்டு பாக்கெட்டுகளை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படும் என்று தற்காலிகமாக அறிவிப்புகளை வெளியிட்டது. இருப்பினும் நேற்று செவ்வாய்க்கிழமை அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

இதுபற்றி அல் அதிலின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான தனஞ்சய் தாதர் என்பவர் கூறுகையில், ஆரம்பத்தில் எங்களிடம் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது குறித்து தெரியவில்லை, ஆனால் இப்போது எங்கள் கடைகளில் அரிசி வாங்குவதற்கு வரம்பு எதுவம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் போன்ற பிற நாடுகளில் உள்ள சப்ளையர்களிடமிருந்தும் அரிசியை நாங்கள் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்றுமொரு கடையான அல் பர்ஷா ஸ்டோர், அதன் நுழைவுப் பகுதியில், “எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அரிசி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மயில் சூர்த்தி கோலம் அரிசி மற்றும் அம்பே மோஹர் அரிசி வாங்குவதற்கு தற்காலிக வரம்பை விதிக்கிறோம். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் இரண்டு பைகள், இது 2 கிலோ மற்றும் 5 கிலோ பேக்கேஜிங் இரண்டிற்கும் பொருந்தும்” என்று அறிவிப்புகளை வைத்துள்ளது.

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்:

இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் மற்றும் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கடந்த ஜூன் மாதம் பெய்த கோடை மழையால், நெல் வயல்களில் வெள்ளம் புகுந்தது மற்றும் பல இந்திய மாநிலங்களில் நெல் விதைப்பு தடைபட்டது.

ஏற்கனவே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், தற்போது இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடை உலகளாவிய சந்தைகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் பல நாடுகள் வெள்ளை அரிசியை நம்பியுள்ளன, குறிப்பாக மத்திய கிழக்கில் ஒரு பெரிய வெளிநாட்டு இந்திய மக்கள் தொகை உள்ளது. அதேசமயம், ஆப்பிரிக்காவில் சுமார் 50 நாடுகள் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றன. அவ்வாறு இருக்கையில், அரிசியை பிரதான உணவாக நம்பியிருக்கும் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!