அமீரக சட்டங்கள்

அமீரகம் தொழிலாளர்களுக்கு வழங்கும் பத்து வகையான பணி அனுமதி..!! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும்…!!

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? அமீரகத்தில் உள்ள தனியார் துறையைப் பொறுத்தவரை, உங்கள் நிறுவனம் அமீரகத்தில் இருந்தால் (freezone அல்லாமல்), நீங்கள் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) வழங்கும் பனி அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

அந்த வகையில் MOHRE, ஃப்ரீலான்ஸ் வேலை முதல் தற்காலிக வேலை வரை வேலை தேடுபவர்களுக்கு பல்வேறு வகையான பணி அனுமதிகளை வழங்குகிறது. மேலும், இந்த பணி அனுமதிகள் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் விண்ணப்பிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணி அனுமதிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகையில் உள்ள பணி அனுமதிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. உறவினர் அனுமதியின் குடியிருப்பின் கீழ் பணி அனுமதி

இந்த அனுமதியானது குடும்ப உறுப்பினர் ஒருவரால் ஸ்பான்சர் செய்யப்படும் ரெசிடென்ஸ் விசா உள்ளவர்களுக்குப் பொருந்தும். இந்த பணி அனுமதிக்கு நிறுவனம் வெறுமனே விண்ணப்பிக்க மட்டும் வேண்டும் மற்றும் தொழிலாளியின் விசாவின் ஸ்பான்சராக இருக்கக்கூடாது.

2. சிறார் பணி அனுமதி (Juvenile work permit)

இந்த பணி அனுமதி மூலம், 15 முதல் 18 வயது வரை உள்ள ஒருவர் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். குறிப்பாக, தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பதின்ம வயதினருக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேலும், ஒரு நிறுவனம் சிறார் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பின்வரும்சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

  • வயது முதிர்ந்த பணியாளருடன் ஒப்பிடும்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு மணிநேரமமாக வேலை நேரம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • அபாயகரமான அல்லது கடின உழைப்புக்கு சிறார்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது.

3. மாணவர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அனுமதி:

இது 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அமீரக குடியிருப்பாளர் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற அனுமதிக்கிறது. இந்த அனுமதி பயிற்சி நோக்கங்களுக்காக தனியார் துறையில் சேர விரும்பும் மாணவர்களுக்கானது மற்றும் இந்த பயிற்சி அனுமதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். இதற்கும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது வகை

4. வேலை அனுமதி (நாட்டிற்கு வெளியில் இருந்து ஒரு தொழிலாளியை பணியமர்த்துதல்)

நாட்டிற்கு வெளியில் இருந்து ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்த வேண்டுமெனில், நிறுவனங்கள் இந்த பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, தொழிலாளரின் ரெசிடென்ஸ் விசாவிற்கு விண்ணப்பித்தல், மருத்துவ பரிசோதனை செய்தல், எமிரேட்ஸ் ஐடி கார்டு, லேபர் கார்டு ஆகியவற்றைப் பெறுதல் மற்றும் தொழிலாளர் அமீரகத்திற்கு வந்த 60 நாட்களுக்குள் உங்கள் பாஸ்போர்ட்டில் அமீரக ரெசிடென்ஸ் விசாவை ஸ்டாம்ப் செய்தல் போன்ற அனைத்து பணியமர்த்தல் நடைமுறைகளையும் முடிப்பதற்கு பணியமர்த்தும் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

குறிப்பாக, இவையனைத்திற்கும் ஆகும் செலவுகளையும் முதலாளியே ஏற்க வேண்டும். அவ்வாறு ஒரு நிறுவனம் ஒரு பணியாளருக்கான பணி அனுமதியைப் பெறவில்லை என்றால், அவர்களுக்கு 50,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதமும் 200,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படும்.

5. டிரான்ஸ்ஃபர் பணி அனுமதி:

இந்த அனுமதி வெளிநாட்டவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற அனுமதிக்கிறது. மாறும் நிறுவனம் நிறுவனம் MOHRE ஆல் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

6. ஃப்ரீலான்ஸ் அனுமதி:

நீங்கள் எந்தவொரு நிறுவனத்திற்கும் கீழ் இல்லாமல், சுதந்திரமாக வேலை செய்ய விரும்பினால், தனிநபராகவே இந்த பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

7. கோல்டன் விசா வேலை அனுமதி:

உங்களிடம் கோல்டன் விசா இருந்தாலும், நீங்கள் அமீரகத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்களுக்கு பணி அனுமதி தேவை. அதன்படி, மூன்று பிரிவுகளில் பணி அனுமதி வழங்கப்படுவதாக MOHRE தெரிவித்துள்ளது.

8. தற்காலிக வேலை அனுமதி:

அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளரை ஆறு மாதங்களுக்கு மிகாமல் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கு பணியமர்த்த வேண்டுமெனில், நிறுவனங்கள் இந்த தற்காலிக பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

9. ஒரு பணி அனுமதி (One-mission permit):

இந்த பணி அனுமதி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக வேலை அல்லது ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிக்க வெளிநாட்டிலிருந்து ஒரு தொழிலாளியை நியமிக்க நிறுவனத்தை அனுமதிக்கிறது.

10. பகுதி நேர வேலை அனுமதி:

ஒரு ஊழியரின் வேலை நேரம் வாரந்தோறும் 20 மணிநேரத்திற்குக் குறையாமல் இருக்கும் பட்சத்தில், அவர் முதலாளி அல்லது வேறு யாருடைய அங்கீகாரமும் இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்யலாம். எனவே, இந்த அனுமதி ஒரு ஊழியர் பகுதி நேர தொழிலாளர் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!