அமீரகத்தில் கணவரின் விசாவில் இருக்கும் மனைவி நிறுவனத்தில் வேலை செய்யலாம்.. அதற்கான வழிகள் என்ன? தெரியுமா உங்களுக்கு.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் கணவரால் ஸ்பான்சர் செய்யப்பட்ட மனைவி ‘housewife’ விசாவுடன் நாட்டில் வசித்து வரும் போது, அவரது விசாவின் நிலையை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியுமா? இது சட்டவிரோதமானதா மற்றும் ஏதேனும் அபராதம் உள்ளதா? இதற்கான நடைமுறை என்ன? இதுபோன்ற கேள்விகளும் சந்தேகங்களும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் அவற்றுக்கான பதிலையும் விளக்கத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, ஒருவர் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறார் என்று வைத்துக் கொண்டால் இதற்கு பணி அனுமதி, ஆஃபர் லெட்டர் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தப் படிவங்கள் மற்றும் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வசிப்பிடம் தொடர்பான 2021 ஆம் ஆண்டின் பெடரல் ஆணைச் சட்டம் எண் 29 ஆகியவை பொருந்தும்.
எனினும், அமீரகத்தில் கணவரின் ஸ்பான்சர்ஷிப்பில் வசிக்கும் ஒரு பெண் தனது விசாவை மாற்றாமலேயே வேலையில் சேர அனுமதி உண்டு. இது 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 6(1)(c)இன் படி அனுமதிக்கப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணுக்கான பணி அனுமதியின் வகைகள் பின்வருமாறு தீர்மானிக்கப்படும்:
கணவன்/மனைவி விசாவில் ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களுக்கான பணி அனுமதி:
இந்த வகையான பணி அனுமதி (work permit) அவர்களது குடும்பத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டு, அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புச் சட்டத்தின் 6(1) மற்றும் குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 5(4) இன் படி, அமீரகத்தில் உள்ள ஒரு நபர், நாட்டில் உள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவதற்கு தனது வருங்கால முதலாளியிடமிருந்து பணி அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அமீரகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றச் சட்டங்கள் கூறும் விதிகள்:
- வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 6(1): MoHRE யிடமிருந்து பணி அனுமதி பெறாமல் எந்த ஒரு பணியாளரையும் பணியமர்த்தவோ அல்லது வேலை செய்யவோக் கூடாது .
- குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 5(4): ஒரு வெளிநாட்டவர், முறையான பணி அனுமதி இல்லாமல், நாட்டில் எந்தச் செயலிலோ அல்லது வேலையிலோ ஈடுபடக் கூடாது .
எனவே, மேற்கூறிய சட்ட விதிகளின் அடிப்படையில், நீங்கள் உங்கள் கணவரின் ஸ்பான்சர்ஷிப்பில் வசித்து வந்தாலும், நீங்களும் உங்களின் வருங்கால முதலாளியும் 2022 இன் நிர்வாகத் தீர்மானம் எண். 38 இல் குறிப்பிடப்பட்டுள்ள பணி அனுமதி, ஆஃபர் லெட்டர் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்த நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்திருந்தால் அமீரகத்தில் பணிபுரியத் தகுதி உடையவர்கள் என கூறப்படுகிறது.
இருப்பினும், பணி அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு பின்வரும் தேவைகள் இருக்கலாம். அதாவது, பணி அனுமதியைப் பெறுவதற்கு, தேவைப்பட்டால் உங்கள் கணவரால் கையொப்பமிடப்பட்ட NOC கடிதத்தை உங்கள் வருங்கால முதலாளி மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திற்கு (MoHRE) சமர்ப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், செல்லுபடியாகும் பணி அனுமதி பெறாமல் அமீரகத்தில் உள்ள ஒரு முதலாளியால் நீங்கள் பணியமர்த்தப்பட்டால், அத்தகைய வேலைவாய்ப்பு சட்டவிரோதமாக கருதப்படலாம், இதனால் நீங்களும் உங்கள் வருங்கால முதலாளியும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமாகும்.