வளைகுடா செய்திகள்

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக மாறி வரும் ஓமான்.. புள்ளி விபரங்களை வெளியிட்ட அமைச்சகம்..!!

ஓமன் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த மக்கள் தொகையைடுத்து இந்தியாவிலிருந்து அதிக மக்கள் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஓமன் நாட்டிற்கு வருகை புரிந்த முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை வரை ஓமான் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 907,000 என்ற எண்ணிக்கையில் மற்ற பிற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள் முன்னணியில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 369,000 என்ற எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக 92,000 ஜெர்மனியர்கள், 81,000 சீனர்கள் மற்றும் 71,000 ஏமனியர்கள் என இந்த ஆண்டு ஓமானிற்கு வருகை தந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. அத்துடன், இந்திய நாட்டைச் சேர்ந்த மக்கள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் 105,419 புறப்பாடுகள் (Departure) மற்றும் 63,575 வருகையினை (Arrival) பதிவு செய்துள்ளனர்.

ஓமன் சுல்தானகத்திற்கு வருகை தரும் இந்திய குடிமக்கள் 14 நாள் குறுகிய கால விசாக்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒரு மாத விசாக்களை, பதிவு செய்யப்பட்ட பயண முகவர்கள் அல்லது ஆன்லைனில் எளிதாகப் பெறலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், எளிமையான விசா நடைமுறைகள் மூலம் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து அதிகப்படியான மக்களை சுற்றுலாவிற்காக ஓமன் நாட்டிற்கு அழைக்கும் பொருட்டு கடந்த ஜூலை மாதம், ஓமன் நாட்டின் பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் இந்தியாவில் 170 பயண ஏஜெண்டுகளை நியமித்து ஓமன் நாட்டின் பெருமைகளை காட்சி படுத்திக் காட்டி விளம்பரப்படுத்தியது.

எனவே, ஓமன் நாட்டிற்கு வந்த இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முன்பை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஓமானின் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கான துணை இயக்குநர் ஜெனரல் அஸ்மா அல் ஹஜ்ரி கூறியுள்ளார்.

அதாவது கடந்த 2022 ம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருகை புரிந்த இந்தியர்களின் எண்ணிக்கை 126 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 500,000 இந்திய சுற்றுலாப் பயணிகளை கவரவும் ஓமானின் சுற்றுலா அமைச்சகம் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!