வளைகுடா செய்திகள்

ஓமான்: தொழிலாளர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டப்பிரிவுகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..!!

தொழிலாளர்களின் பாதுகாப்பையே பிரதானமாக கருதி ஓமானில் இயற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள், எவ்வாறு தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். ஆணை எண் 53/2023 ஆல் வழங்கப்பட்ட தொழிலாளர் சட்டம் பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றது.

அதன்படி பிரிவு 103, அமைச்சரவையில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குழு கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என்று கூறுகிறது. குழுவின் உருவாக்கம், அதிகாரங்கள் மற்றும் பணி வரையறை ஆகியவை தொழிலாளர் அமைச்சரின் முடிவால் தீர்மானிக்கப்படும்.

பிரிவு 104 இன் கீழ், பணியிடங்களில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகள் குறித்து தெளிவாக தொழிலாளிக்கு, முதலாளி அல்லது அவரது பிரதிநிதி விளக்க வேண்டும். மேலும் அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தொழிலாளிக்கு கூறப்பட வேண்டும். பணியிடங்கள் எப்பொழுதும் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளிகள் கையாளும் இயந்திரம் நன்முறையில் பராமரிக்கப்பட வேண்டும். இயந்திரத்தின் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த பயிற்சியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என முழுக்க முழுக்க தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு 104வது சட்டப்பிரிவு ஏற்றப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு முறையினை வழங்குவதற்கு ஈடாக, முதலாளி தொழிலாளியிடம் கட்டணம் வசூலிக்கவோ அல்லது அவரது ஊதியத்தில் இருந்து எந்த தொகையையும் கழிக்கவோ கூடாது என சட்டம் கூறுகிறது. மேலும் சட்டப்பிரிவு 105-ன் படி, தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வேலை சாதனங்களை பாதுகாக்கும் கடமை தொழிலாளிகளுக்கு உள்ளது. இயந்திரங்களின் மீது கவனம் கொண்டு, அவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை அறிய வேண்டும்.

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பற்றி பிரிவு 106 விளக்குகின்றது. இதன்படி அனைத்து பணியிடங்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான காற்றோட்டம், விளக்குகள், குடிநீர், எக்ஸாஸ்ட் ஃபேன், தூசி மற்றும் புகையை அகற்றும் உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டால் ஓய்வு எடுப்பதற்கு தனி அறைகள் ஒதுக்கப்பட வேண்டும். தீயணைப்பான்கள் தேவையான இடங்களில் முறையாக பொருத்தப்பட வேண்டும். இவைகள் முறையாக கடைபிடிக்காவிட்டால் அதற்கான அபராதங்கள் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும்.

மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தமான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பிரச்சனையை சரி செய்வதற்காக முதலாளிக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும் என சட்ட பிரிவு 107 கூறுகிறது.

மேலும், விதிமீறல்களின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பணியிடத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடுவதற்கு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், நடவடிக்கைகளை செயல்படுத்த ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ராயல் ஓமன் காவல்துறையிடம் இருந்து உதவி கோரப்படலாம் எனவும் சட்டம் எடுத்துரைக்கின்றது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!