உம்ரா செல்லும் பெண்களுக்கான ஆடைகளில் புதிய கட்டுப்பாடு…!! அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவுதி அரேபியாவின் மெக்காவில் (Mecca) அமைந்துள்ள புனித மசூதியில் (Grand Mosque) உம்ராவை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெண்களுக்கு சவுதி அதிகாரிகள் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மசூதிக்கு வரும் இஸ்லாமியப் பெண்கள் சில விதிகளுக்குட்பட்டவாறு உடைகளை அணிந்தால் மட்டுமே வழிபாடுகளின் போது அனுமதி உண்டு என்று X தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த ஆடைக் கட்டுப்பாடுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள்:
- உடையானது தளர்வானதாக இருக்க வேண்டும்
- ஆபரணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
- பெண்ணின் உடலை முழுமையாக உடை மறைக்க வேண்டும்
தற்போது, நாட்டில் உம்ரா சீசன் களைகட்டியிருப்பதால், இந்த விதிகள் முதன்மைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நடப்பு சீசனில் சுமார் 10 மில்லியன் முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து மெக்கா நோக்கி உம்ரா யாத்திரை மேற்கொள்வார்கள் என்று சவுதி அரேபியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
வழிபாட்டாளர்களுக்கான பல்வேறு வசதிகள்:
தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் கலந்துகொண்ட வருடாந்திர இஸ்லாமிய ஹஜ் சீசன் முடிந்த பிறகு, உம்ரா சீசன் தொடங்கியிருக்கிறது.
மேலும், பணப் பற்றாக்குறை மற்றும் உடல் ஒத்துழைக்காமை போன்ற காரணங்களால் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாமல் இருக்கும் முஸ்லிம்கள், உம்ரா பநணம் மேற்கொள்ள சவுதி அரேபியா செல்வார்கள்.
இதனாலேயே சமீப மாதங்களில், சவுதி அரேபியா உம்ரா செய்ய வரும் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், பெர்சனல், விசிட் மற்றும் டூரிஸ்ட் விசா போன்ற பல்வேறு வகையான நுழைவு விசாக்களை வைத்திருக்கும் முஸ்லிம்கள் உம்ராவை மேற்கொள்ளவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கல்லறை அமைந்துள்ள அல் ரவ்தா அல் ஷரீஃபாவை பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கூடுதலாக, யாத்ரீகர்களின் வசதிக்காக உம்ரா விசாவை 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக சவுதி அதிகாரிகள் நீட்டித்துள்ளனர் மற்றும் தரை, வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதற்கும் எந்த விமான நிலையத்திலிருந்தும் வெளியேறவும் அனுமதித்துள்ளனர்.
குறிப்பாக, பெண் வழிபாட்டாளர்கள் இனி ஆண் பாதுகாவலர்களின் துணையுடன் வரவேண்டிய அவசியமில்லை. அதேபோல், GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் தொழிலைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் உம்ரா செய்ய முடியும் என்றும் சவுதி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.