அமீரக செய்திகள்

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சிற்கான பதிவு துவக்கம்..!! இலவச பயிற்சி வகுப்புகள், நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு…

துபாய் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சின் (DFC) ஏழாவது பதிப்பு வரும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 26 வரை சுமார் 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஃபிட்னஸ் சேலஞ்சிற்கான பதிவு சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, இதில் பதிவு செய்ய விரும்பும் குடியிருப்பாளர்கள் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சின் (DFC) இணையதளத்தில் (https://www.dubaifitnesschallenge.com/register/) சென்று பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு பதிப்பானது புத்தம் புதிய துபாய் ஸ்டாண்ட்-அப் பேடில் (Dubai Stand-Up Paddle) என்ற நீர் விளையாட்டு, ‘Mai Dubai’ வழங்கும் துபாய் ரன் மற்றும் ‘DP World’ வழங்கும் துபாய் ரைடு போன்ற முதன்மையான செயல்பாடுகளுடன் திரும்புவதாகக் கூறப்படுகிறது.

துபாயில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சில் பங்கேற்கும் குடியிருப்பாளர்கள் பிரபலமான 30×30 சவாலை ஏற்றுக்கொள்வார்கள். அதாவது, 30 நாட்களுக்கு தினமும் 30 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இந்த ஆண்டு சவாலில் என்னென்ன இருக்கும்?

துபாயை உலகின் மிகவும் சுறுசுறுப்பான நகரங்களில் ஒன்றாக மாற்றும் நோக்கத்தில் நடத்தப்படும் DFC இந்தாண்டு மூன்று இடங்களில் நடத்தப்படும். இதில் பங்கேற்பாளர்களுக்கு மிகவும் பிடித்த DP வேர்ல்ட் கைட் பீச் வில்லேஜும் ஒன்றாகும், இது துபாயின் மிகவும் பிரபலமான கடற்கரைப் பகுதிகளில் ஒன்று.

அதேபோல், RTA முஷ்ரிஃப் பார்க் சைக்கிள் சென்டரில் பைக் பாதைகள், ஒரு பம்ப் டிராக் மற்றும் இலவச பைக் வாடகை, மேலும் Meraas வழங்கும் ரன் மற்றும் ரைடு சென்ட்ரல் ஆகியவை இருக்கும்.

அதுமட்டுமின்றி, துபாய் முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி வகுப்புகளை எளிதாக அணுகுவதற்கு, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ், துபாய் மல்டி கமாடிட்டிஸ் சென்டர் (டிஎம்சிசி), ஹட்டா, துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டர் (டிஐஎஃப்சி) மற்றும் துபாய் போலீஸ் ஆபிசர்ஸ் கிளப் உட்பட, நகரம் முழுவதும் உள்ள 25 சமூக உடற்பயிற்சி மையங்கள் DFCயில் இடம்பெறுகின்றன.

முக்கிய நிகழ்வுகளின் தேதிகள்:

  • பங்கேற்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமான துபாய் ரைடு நவம்பர் 12 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய நாளில் குடும்பங்கள், பொழுதுபோக்கு சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் RTAவின் ஆதரவுடன் ஷேக் சையத் சாலை மற்றும் டவுன்டவுன் துபாய் வழியாக துபாயின் சின்னமான அடையாளங்களைக் கடந்து செல்லலாம்.
  • அதைத் தொடர்ந்து, நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள துபாய் ரன் நிகழ்வில், ஆர்வமுள்ள ஓட்டப்பந்தய வீரர்கள், ஜாகர்கள் மற்றும் நடைபயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். DFCயின் முந்தைய பதிப்பில் நடைபெற்ற துபாய் ரைடில் 34,897 சைக்கிள் ஓட்டுநர்களும், துபாய் ரன்னில் 193,000 பங்கேற்பாளர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அடுத்தபடியாக, நவம்பர் 18ஆம் தேதி துபாய் ஸ்டாண்ட்-அப் பேடில் நடைபெறும். இந்த நிகழ்வானது பங்கேற்பாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உறுதியளிக்கும். மேலும், பலகையில் நின்று துடுப்புப் போடுவதற்கான பயிற்சியும் பங்கேற்பாளர்களுக்கு கொடுக்கப்படும். அத்துடன், தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக, பங்கேற்பாளர்கள் துபாயிலிருந்து இலவச போக்குவரத்து மற்றும் உயர்தர பலகைகளை அணுகலாம்.

இந்த சவால் குறித்து துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் (DSC) பொதுச்செயலாளர் சயீத் ஹரேப் அவர்கள் பேசுகையில், துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து, துபாய் ஃபிட்னஸ் சவாலின் 7வது பதிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம், முந்தைய உடற்பயிற்சி சவாலுக்குப் பிறகு, பலரும் வழக்கமான உடல் செயல்பாடுகளைத் தழுவியதால், இந்த முயற்சியின் தாக்கம் 30 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!