அமீரக செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு 50 மில்லியன் திர்ஹம் நிதியை அறிவித்த துபாய் ஆட்சியாளர்.. ‘Compassion for Gaza’ பிரச்சாரமும் தொடக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் (MBRGI) மூலம், போரில் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் திர்ஹம்ஸ் நிதியை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெருக்கடி காலங்களில் உலகம் முழுவதும் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் உதவிகளை ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மனிதாபிமான உதவியை துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ராஷித் அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று அமீரக தலைமையின் உத்தரவின் படி, கடுமையான போரில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி திரட்டும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் நேற்று வெள்ளிக்கிழமை மனிதாபிமான பிரச்சாரம் ஒன்றையும்  தொடங்கியுள்ளது.

‘Compassion for Gaza’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின் பொருள் ‘காசாவுக்கு இரக்கம்’ என்பதாகும். தற்சமயம் உணவு, நீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, உலக உணவுத் திட்டத்தின் ஒத்துழைப்புடன், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அமீரக அரசின் இந்த பிரச்சாரமானது, அமீரகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ மையங்கள், தனியார் துறை, நாட்டிலுள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் பாலஸ்தீனியர்களுக்காக நிவாரண பேக்கேஜ்களைச் சேகரித்து அணிதிரட்டுவதற்கான மையங்களை நிறுவும் என்றும் கூறப்படுகிறது. மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் துணை நிற்கவும் அவர்களின் துன்பத்தைத் தணிக்கவும் இந்த பிரச்சாரம் உதவும் என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் ஆணையத்தின் மேற்பார்வையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அபுதாபி மினா சையதில் (Mina Zayed) உள்ள அபுதாபி ஸ்போர்ட்ஸ் ஹாலில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பிரச்சாரம்  நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எமிரேட்ஸின் மற்ற பகுதிகளில் நிவாரணம் திரட்டுவதற்கான மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!